×

பொதுமக்கள் உயிரை துச்சமென கருதும் வாலிபர்கள் பைக் ரேஸ் களமான சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வாலிபர்கள் நடத்தும் பைக் ரேஸால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அப்பாவி உயிர்கள் பலியாகும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் காவல்துறை மவுனம் காப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இன்றைய இளைய தலைமுறை மட்டுமின்றி வாலிப வயதை கடந்த அனைவருக்கும் பைக் என்பது மறக்க முடியாத நினைவுகளை தரும். ஆனால் இன்று இதற்கு நேர் மாறாக பைக் வெறியர்கள் அதிவேகமாக பைக்குகளை ஓட்டுவது, விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர். தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை தற்போது இந்த வகையில் பைக் ரேஸ் களமாக மாறி வருகிறது. பல லட்சங்கள் கொடுத்து அதிவேக பைக்குகள் வாங்கி வைத்திருக்கும் இந்த வாலிபர்கள்  ஒன்று கூடி பணம் மற்றும் இதர பந்தயங்களுக்காக பைக் ரேசை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அதிவேக பைக்குகளை பார்த்து ஆச்சரியத்துடன் மற்ற வாகன ஓட்டிகள் பயந்து ஒதுங்கி  செல்கின்றனர்.

சிலர் இவர்களை  திட்டி சென்றதும் உண்டு. இந்த கும்பல் நடத்தும் அட்டூழியத்தால் இதுவரை பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு அப்பாவி  பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சில பைக்குகளில் வாலிபர்களுடன் பெண்களும் பின்னால் அமர்ந்து சென்று ரேஸில் கலந்து கொள்கின்றனர். இவர்கள் மோதி இறப்பிற்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குகள் போட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. அதேபோல் பலர் கை கால்களை இழந்தும், உடல் நசுங்கியும் பாதிப்படைந்து தங்களது எதிர்காலத்தை கேள்விக்குறியுடன் எதிர்நோக்கி வாழ்ந்து வருகின்றனர். இதுபற்றி பலமுறை வேலூர் மாவட்ட போலீசாருக்கு புகார்கள் வந்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. அதேநேரத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து வரும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் லாரி மற்றும் சரக்கு வாகனங்களை மட்டுமே தங்களது இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். தவிர இந்த பைக் ரேஸ் ஆசாமிகளை பிடித்ததாக தெரியவில்லை. மேலை நாடுகளில் அதிவேகமாக செல்லும் இத்தகைய பைக் ஆசாமிகளை போலீசார் பின் தொடர்ந்து வந்து பிடிப்பதும், அவர்களை எச்சரித்தோ அல்லது அபராதம் வசூலித்தோ அனுப்புவர். ஆனால், நம்மூர் போலீசாருக்கு ஏனோ பைக் ரேஸ் செய்பவர்கள் பெரும்  பணக்காரர்கள் அல்லது பெரும் பின்புலம் உள்ளவர்கள் என்பதால் அமைதி காக்கின்றனரா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து சரக்கு, பஸ் லாரி டிரைவர்கள் கூறுகையில், ‘பைக் ரேஸ் ஆசாமிகள் தங்களது பைக்கை மின்னல் வேகத்தில் இயக்குகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து இந்த வழியாக அதிகளவில் வருகின்றனர். பின்னர் ஞாயிறுதோறும் மாலை நேரங்களில் பெங்களூரில் இருந்து மீண்டும் சென்னை நோக்கி செல்கின்றனர். ஆரம்ப காலத்தில் ஏதோ பைக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சார்பில் டெஸ்ட் டிரைவ் செல்கின்றனர் என கருதினோம். ஆனால், பின்னர் தான் இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் ரேஸ் நடத்துவது தெரியவந்தது.  பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை உயிர்பலி கேந்திரமாக மாறி வருவதை தடுக்க வேண்டியது அவசியமாகி உள்ளது. பலருக்கு சாவுமணி ஒலிக்க காரணமாக இருந்தவர்களை பின்புலம் கருதி போலீசார் பிடிக்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது’ என்றனர்.

புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை

சென்னையில் இருந்து  இரவு 10 மணியளவில் 10க்கும் மேற்பட்ட அதிநவீன பைக்குகளில் பெங்களூரை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் ரேசில் சென்று கொண்டு இருக்கின்றனர். தொடர் விடுமுறை இருந்தால் அதிகளவில் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கிறது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கையில் உயிரை பிடித்து கொண்டு ஓட்டி செல்கின்றனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லையாம். அவர்களை பள்ளிக்கொண்டா அல்லது வாணியம்பாடி பகுதியில் உள்ள டோல்கட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால் பைக் ரேசில் சென்றவர்கள் அனைவரும் பெரிய அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகளின் மகன்கள், உறவினர்கள் என பட்டியல் நீண்டு கொண்டு செல்வதால் எதற்கு வம்பு என்ற ரீதியில் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

Tags : highway ,Chennai ,Bangalore , Bike race field , Chennai-Bangalore highway
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...