×

ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் துறைகளை ஊக்குவிக்க ரூ.70 ஆயிரம் கோடிக்கு சலுகை திட்டம்: பணவீக்கம் குறைவு தான் என்கிறார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க,ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகை திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஆகஸ்ட்டில் நாட்டின் ஏற்றுமதி அளவு 6.05 சதவீதம் குறைந்து 26.13 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. வேகமாக வளர்ந்து வந்த ரியல் எஸ்டேட் துறையும், தற்போது மந்தமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுக்குள், நாட்டின் ஏற்றுமதியை 3 மடங்காக உயர்த்தி, 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏற்றுமதி மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சியை அதிகரிக்க ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகை திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

அவற்றின் விவரம்:
* ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வரிகுறைப்பு திட்டம் (ஆர்ஓடிடிஇபி) வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். தற்போதுள்ள திட்டங்கள் மூலம் மத்திய அரசு ஏற்கனவே ரூ.40 ஆயிரம் கோடி முல் ரூ.45 ஆயிரம் கோடி வரை திருப்பி வழங்கி வருகிறது.
*  ஏற்றுமதிக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு அதிக காப்பீடு வழங்குவதற்காக ஏற்றுமதி கடன் உறுதி நிறுவனத்துக்கு (இசிஜிசி), ஆண்டுக்கு ரூ.1,700 கோடியை அரசு வழங்கும்.
*  ஏற்றுமதி கடன்களுக்கு ரிசர்வ் வங்கி முன்னுரிமை அளிக்க உள்ளது. ஏற்றுமதி கடனாக ரூ.36 ஆயிரம் கோடியை ரிசர்வ் வங்கி கூடுதலாக வழங்கும். இதன் மூலம், மொத்த ஏற்றுமதி கடன் மதிப்பு ரூ.68 ஆயிரம் கோடியாக உயரும்.

*  ஏற்றுமதியாளர்களுக்கு ஜிஎஸ்டி.யில் உள்ள இன்புட் டாக்ஸ் கிரெடிட், இந்த மாத இறுதி முதல் முழுவதும் எலக்ட்ரானிக் மயமாக்கப்படும். விரைவில் பணம் திரும்பி (ரீபண்ட்) கிடைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
*  பல நாடுகளுடன், இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், ஏற்றுமதி நிறுவனங்கள் கட்டண சலுகைகள் பெற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
*  துபாய் ஷாப்பிங் திருவிழா போல், இந்தியாவிலும் 4 இடங்களில் பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழா மார்ச் மாதம் நடத்தப்படும். இதில் ஆபரண நகைகள், கைவினைப் பொருட்கள், யோகா, சுற்றுலா, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் தோல் பொருட்கள் உட்பட பல துறைகள் பங்குபெறும்.

*  பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே வைக்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரம் சீரடைவதற்கான தெளிவான அறிகுறி.
*  வங்கிகளில் பெறப்படும் கடனை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் 19ம் தேதி ஆலோசனை நடத்தப்படும்.
*  கடந்த பிப்ரவரி முதல், கடன் வட்டிக்கான அடிப்படை புள்ளிகளை 110 ஆக ரிசர்வ் வங்கி குறைத்து விட்டது. இந்த வட்டி குறைப்பு சலுகைளை கடன் பெறுபவர்களுக்கு அளிக்க வங்கிகள் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

‘பிரச்னைகளை சமாளிக்கும் வழி தெரியாமல் இருக்கிறார்’:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்புகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா, ‘‘இந்திய பொருளாதாரத்தை சீராக்க தற்போது அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் அலங்கார வேலை. இதுபோன்ற துண்டு அறிவிப்புகள் பலன் அளிக்காது. பெரிய அளவிலான பொருளாதாரம் பற்றி நிதியமைச்சருக்கு சரியான புரிதல் இல்லை. பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க வழி தெரியாமல் நிதியமைச்சர் உள்ளார் என்றுதான் சொல்ல முடியும்,’’ என்றார்.

வீட்டு வசதி திட்டம் ஊக்குவிப்பு:
வீட்டு வசதி திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதே அளவிலான தொகை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘பொருளாதார மந்தநிலை காரணமாக வீட்டு வசதி திட்டங்கள் எல்லாம் முடக்கம் அடைந்துள்ளன. நாடு முழுவதம் 8.5 லட்சம் பேர் வீடுகளை வாங்க முடியாமல் உள்ளனர். இதனால் கட்டுமான நிலையில் உள்ள வீட்டு வசதி திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி வழங்கும். இத்திட்டத்தின் கீழ் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதி திட்டங்களை மேற்கொள்ளும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தங்கள் வீட்டு வசதி திட்டங்களை நிறைவு செய்வதற்கான இறுதிக்கட்ட நிதியை பெறலாம்.

அந்த நிறுவனங்கள் வங்கி கடன் பாக்கி, திவால் நடவடிக்கை போன்றவற்றை சந்தித்திருக்கக் கூடாது. இத்திட்டம் மூலம் 3.5 லட்சம் பேர் பயனடைவர். வீடுகள் வாங்குவதில் அரசு ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, அவர்களுக்கான வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்படும். வீட்டு வசதி நிறுவனங்கள், வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களுக்கு கடன் பெறும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கடன்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படும்,’’ என்றார்.

Tags : Nirmala Sitharaman , Export, Real Estate Sector, Promotion, Rs 70 Thousand Crores
× RELATED ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள...