×

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் எதிரொலி பேனர் வைத்தால் ஒரு ஆண்டு ஜெயில்: கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதையடுத்து, பேனர் வைத்தால் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை, பள்ளிக்கரணை அருகே உள்ள ரேடியல் சாலையில் நேற்று முன்தினம் சுபஸ்ரீ என்ற இளம்பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது, திருமண நிகழ்ச்சிக்காக முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று வைத்திருந்த பேனர் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது சம்பந்தமான வழக்கு உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு உடனே வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தனர். சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், கட்-அவுட் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். சுபஸ்ரீ போன்று எத்தனை உயிர்கள் இன்னும் வேண்டும் என்பது உள்ளிட்ட கடும் கண்டனத்தை நீதிமன்றம் பதிவு செய்தது. மேலும், தமிழகத்தில் பிளாஸ்டிக் போன்று ஏன் பேனர் வைப்பதற்கும் தடை விதித்து உத்தரவிடக்கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், இனி தங்களது நிகழ்ச்சிகளுக்கு பேனர், கட்-அவுட் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உத்தரவிட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்கள், கொடிகள் வைப்பதற்கு நிரந்தர தடை விதிக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசு நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு அவசர உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:

தமிழகம் முழுவதும் பேனர், கட்-அவுட், கொடி கட்ட அனுமதி வழங்க வேண்டாம். இதை அனைத்து கலெக்டர்களும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நெடுஞ்சாலைகள், தெருக்கள், நடைபாதைகளில் பேனர், கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் தினசரி கண்காணிக்க உத்தரவிட வேண்டும்.
தங்கள் பகுதியில் உள்ள டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்கும் கடைகளையும் கண்காணிக்க வேண்டும்.

அரசு உத்தரவை மீறி அவர்கள் பேனர் தயாரித்தால் அந்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளின் உத்தரவையும் மீறி பேனர், கட்-அவுட்கள் பொது இடங்களில் வைத்திருந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க, மாநகராட்சி, நகராட்சிகள் சார்பில் தனியாக தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும். மீறி பேனர் வைத்தால் உடனடியாக அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், பேனர் வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களுக்கு அதன்மூலம் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். தமிழக அரசின் உத்தரவுகளை மீறும் அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்ட இருந்த பேனர், கட்-அவுட்கள்  20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை  அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் சென்னை காவல் துறையுடன் இணைந்து தனி அலைபேசி எண்ணுடன் கூடிய மூன்று நடமாடும் வாகனங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆணையர் பிரகாஷ் நேற்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், விளம்பர பதாகைகள் அமைக்க உயர் நீதிமன்ற தடை ஆணை செயல்பாட்டில் உள்ள நிலையில் விளம்பர பதாகைகள் அமைப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இது தொடர்பாக மாநகராட்சி அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் அச்சக உரிமையாளகளுடனும் பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளும் சட்ட திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி சட்டத்திற்கு புறம்பாக விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைப்பவர்கள் மீது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு விளம்பரப் பதாகைக்கு ரூ.5,000 வீதம் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், மாநகராட்சியின் அனுமதி உத்தரவின்றி பதாகைகள் அச்சடிக்கும் அச்சக நிறுவனங்களின் மீது சென்னை மாநகராட்சி அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடி சீல் வைக்கப்படும். சம்பந்தபட்ட நபர்களுக்கு நேரடியாகவும் பத்திரிகை செய்தி வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டு மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி அமைக்கப்படும் விளம்பர பதாகைகளை கண்காணித்து உடனடியாக அகற்றி அமைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே மண்டல அலுவலர்கள் மற்றும் மாநராட்சி துறை சார்ந்த அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 3964 விளம்பர பதாகைகள் மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டு 245 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அமைக்கப்படும் விளம்பர பதாகைகள் குறித்து மண்டலம் 1 முதல் 5 வரையிலான வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190205 என்ற எண்ணிற்கும், மண்டலம் 6 முதல் 10 வரையிலான மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190698 என்ற எண்ணிற்கும், மண்டலம் 11 முதல் 15 வரையிலான தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445194802 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு விளம்பர பதாகைகள் தொடர்பான புகார்களை தெரிவித்தால் ரோந்து வாகனங்களில் பணியில் உள்ள அலுவலர்கள் உடனடியாக சம்பந்தபட்ட இடத்திற்கு நேரடியாக சென்று விளம்பர பதாகைகளை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து விளம்பரம் அமைத்தவர்கள் குறித்த தகவல்களையும் பதிவு செய்து பின்னர் அவற்றை அகற்றி சம்பந்தபட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மருத்துவமனையில் மாஜி கவுன்சிலர் ஜெயகோபால்:
இன்ஜினியர் சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான அதிமுக மாஜி கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆரம்பத்தில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது கைது செய்வதிலும் முனைப்பு காட்டவில்லை. இதனால் அவர், தனியார் மருத்துவமனையில் உடல்நிலையை காரணம் காட்டி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

Tags : Subasree , Banner, Subasree, Echo, One Year, Jail, Collector, Govt.
× RELATED வருமானவரித்துறை முதன்மை தலைமை...