×

ஒரே தேர்தல், ஒரே ரேஷன், ஒரே வரி என்ற வரிசையில் நாட்டின் ஒரே மொழி இந்தி

* அமித்ஷா அறிவிப்பால் பெரும் சர்ச்சை
* எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்விமுறை, ஒரே வரி என்ற வரிசையில், நாடு முழுவதும் ஒரே மொழி இந்தி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது; எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா நேற்று டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ என கூறியுள்ளார்.

இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமித்ஷா, ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும். அடுத்தாண்டு நாட்டின் பல பகுதிகளில் இந்தி தின நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடமும் தாய்மொழியில் பேச வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்பு கூட இந்தியில் வரவில்லை. தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தியில் வருகின்றன,’’ என்றார்.

அமித் ஷாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தி தாய் மொழி அல்ல. இந்த நாட்டில் உள்ள பல மொழிகளின் பன்முகத்தன்மையையும், அழகையும் போற்ற முயற்சிக்கக் கூடாதா? அரசியலமைப்பு சட்டத்தின் 29 சட்டப்பிரிவு, ஒவ்வொரு இந்தியருக்கும் மொழி மற்றும் பண்பாட்டு உரிமையை வழங்கியுள்ளது. இந்தி, இந்து, இந்துத்துவாவை விட இந்தியா மிகப் பெரியது,’ என குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள செய்தியில், ‘இந்தி தினத்தில் இந்தி பேசும் மக்களுக்கு வாழ்த்துக்கள். நாம் அனைத்து மொழிகளையும், கலாச்சாரத்தையும் சமமாக மதிக்க வேண்டும். நாம் பல மொழிகளை கற்றாலும், நமது தாய்மொழியை ஒருபோதும் மறக்க கூடாது,’ என கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் விடுத்துள்ள  அறிக்கையில், ‘‘இந்தி தினத்தை முன்னிட்டு அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து, நாட்டின் பன்முகத்தன்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாட்டின் பன்முகத்தன்மையை மதிப்பதும், பாதுகாப்பதும், வளர்ப்பதுதான் இப்போதைய தேவை. அப்போதுதான் ஒற்றுமை உறுதி செய்யப்படும். உள்துறை அமைச்சரின் கருத்து கூட்டாட்சி மீதான தாக்குதல். ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியை திணிக்க மோடி-அமித்ஷா அரசு தொடர்ந்து முயற்சிப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற கொடிய முயற்சிகளில் இருந்து அரசு விலகியிருக்க வேண்டும்.’’ என கூறியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்களும் அமித்ஷா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : country ,election , One election, one ration, same tax, line, country, one language Hindi
× RELATED நாடு முழுவதும் தொழிலாளர்களுக்காக...