மேலூர் பகுதியில் உள்ள அய்யனார், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பங்கேற்பு

மேலூர்: மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதிகளில் அய்யனார், பட்டதரசி அம்மன் கோயில்களில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியில் பொய் சொல்லா மெய் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள கன்னிமுக விநாயகர், பாலமுருகன், பெரியகருப்பர், சின்னகருப்பர், வீரபத்திரர், முத்துகருப்பு, ஆஞ்சநேயர், பட்டதரசி அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான யாகசால பூஜை கடந்த 11ந் தேதி துவங்கியது. விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாக வேள்விகள் தொடர்ந்து நடைபெற்றது.

நேற்று காலை பட்டதரசி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சர்வ சாதகத்தை கதிரேசன் சிவாச்சாரியார் செய்ய, தக்கார் பாலசரவணன், ஸ்தபதி மாயாண்டி வேளார் கலந்து கொண்டார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பணிக்குழு, கொட்டம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, குமுட்ராம்பட்டி கிராம பொதுமக்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதே போல் மேலூர் அருகில் உள்ள கிடாரிபட்டியில் உள்ள செகுட்டு அய்யனார் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Devotees ,temples ,Ayyanar ,Amman ,Melur , Melur, Ayyanar, Amman Temple, Kumbabhishekam
× RELATED திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி...