×

மன்னார் வளைகுடாவில் உருவான பாசித்திரள் பரவியது: பச்சை நிறத்துக்கு மாறிய பாம்பன் கடல்... சுற்றுலாப்பயணிகள் அச்சம்

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடாவில் உருவான பாசித்திரள் மற்ற பகுதிகளிலும் பரவுவதால் பாம்பன் பாலம் கடல் பகுதியிலும் கடல்நீர் வெண்பச்சை நிறத்தில் காட்சியளித்தது. அதிவேகமான நீரோட்டத்தினால் நீர்த்தட்டைகளும் உருவாகி கடலில் வெண்நுரை திட்டுகளாக மிதந்து சென்றது. மன்னார் வளைகுடா கடலில் அமைந்துள்ள குருசடைத்தீவு, சிங்கிலி, பூமரிச்சான் உள்ளிட்ட தீவுகளையொட்டிய கடல் பகுதியில் நீலப்பச்சைப்பாசி இனவிருத்தி சூழல் காரணமாக பாசித்திரள் ஏற்பட்டது. இதனால் தீவுகளையொட்டி பாம்பன் கடல் பகுதி முழுவதும் பாசி படர்ச்சி ஏற்பட்டு கடல்நீர் வெண்பச்சை நிறத்தில் மாறியது. இதன் காரணமாக, சுவாசிக்க முடியாமல் மீன்கள் செத்து கரை ஒதுங்கின.  

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் இறந்த மீன்களில் சிலவற்றையும், பச்சை நிறத்தில் காட்சியளித்த கடல்நீரையும் ஆய்வுக்காக சேகரித்துச் சென்றனர். பாசித்திரள் நிகழ்வினால் கடல்நீரில் ஏற்றபட்ட நிறமாற்றம் சில நாட்களில் சரியாகி சகஜநிலைக்கு திரும்பிவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பாம்பன் பாலம் கடல் பகுதியிலும் பாசித்திரள் நிகழ்வு பரவியதால் பாம்பன் தெற்குவாடி கடல் பகுதியிலும், ரயில் மற்றும் சாலைப்பாலத்தின் கீழ்பகுதியிலும் கடல் நீர் வெண்பச்சை நிறத்திற்கு மாறியது.

மேலும், கடலடியில் தெற்கிலிருந்து வடக்கு திசை நோக்கி வேகமாகச் செல்லும் கடல் நீரோட்டத்தினால் குருசடை தீவிற்கும், பூமரிச்சான் தீவிற்கும் இடையில் தெற்குகடல் பகுதியில் நீர்த்தட்டுகள் ஏற்பட்டு சோப்பு நுரை போன்ற வெண்நுரைத் திட்டுகள் கடலில் மிதந்து சென்றது.கடல்நீர் வெண்பச்சை நிறத்தில் இருந்ததையும், வெண்பஞ்சுபோல் நீர்த்தட்டுக்கள் கடல் நீரோட்டத்தின் போக்கில் வேகமாக மிதந்து சென்றதையும் பாம்பன் சாலைப்பாலத்தில் நின்றிருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வியப்புடனும், அச்சத்துடனும் பார்த்தனர்.

Tags : sea ,Gulf of Mannar ,Pamban , Gulf of Mannar, Pasitral, Pamban Sea
× RELATED தமிழகத்தில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்!