×

வருசநாடு முதல் வாலிப்பாறை வரை போலியாக அமைக்கப்படும் தடுப்புச்சுவர்களால் ஆபத்து: பொதுமக்கள் புகார்

வருசநாடு: வருசநாடு - வாலிப்பாறையில் போலியாக தடுப்புச்சுவர் பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சாலையில் உள்ள குழிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. வருசநாடு - வாலிப்பாறை இடையே புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியும் தடுப்புச்சுவர் கட்டும் பணியும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி  முடிந்துவிட்டது. தற்போது வருசநாடு கிராமத்தில் இருந்து வாலிப்பாறை கிராமம் வரை சாலைகளில்  சாலைகளுக்கு தேவையான கிராவல் போடாமல் ஜல்லிக்கற்களை மட்டும் பரப்பி விட்டதால், அவை வாகனங்களின் டயர்களை பஞ்சராக்கி  வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் டூவீலர், நாக்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்லவும், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு காலதாமதமாகிறது. சாலைகளில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் தான் இதற்கு காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சாலை பணி கடந்த மூன்று மாதமாக  ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும்  தெரிவித்தனர்.  

இதுகுறித்து தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த வனராஜ் கூறுகையில், ``சாலைகளில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று முடிந்துவிட்டது என அரசு ஒப்பந்ததாரர் தகவல் தெரிவித்தார். ஆனால், தேவையான இடங்களில் தடுப்புச்சுவர் கட்டவில்லை. தேவையற்ற இடங்களில் சாலைகளில் தடுப்புச்சுவர் கட்டி வாகனங்கள் விபத்திற்கு வழிகாட்டி உள்ளனர். மேலும் சில இடங்களில் சாலைகளில் செல்லும் போது ஆங்காங்கே பெரிய குழிகள் உள்ளன. இங்கு முறையாக தடுப்புச்சுவர் கட்டாமல் பணியை போலியாக செய்து வருகின்றனர். எனவே, வருசநாடு முதல் வாலிப்பாறை கிராமம்செல்லும் தார்ச்சாலை பணி முறையாக நடைபெறுகிறதா என கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே மலைக்கிராம மக்களின் கோரிக்கையாகும்’’ என்று கூறினார்.

Tags : blockchains , Yearbook, Volleyball, Fake, Blockchain, Danger
× RELATED தடுப்புகட்டைகள் அகற்றம் அரசு...