×

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய் விதை பிரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

இளையான்குடி: சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வற்றல் மிளகாயிலிருந்து விதைகளை தனியாக பிரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், தாயமங்கலம், திருவுடையார்புரம் ஆகிய வருவாய் பிர்காக்களில் கடந்த ஆண்டு சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரிலும், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ்.மங்கலம், நயினார்கோயில், முதுகுளத்துர், சாயல்குடி ஆகிய பகுதிகளில் 15 ஆயிரம் ஹெக்டேரில் ராம்நாடு முண்டு எனப்படும் குண்டு மிளகாய் அதிகளவில் பயிரிடப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஒரு கிலோ மிளகாய் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. நடப்பாண்டில் லேசான மழை, மிளகாய் விதைக்க ஏற்ற காலநிலை என்பதால், தற்போது சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், ஏற்கனவே விதைக்கு வைத்திருந்த வற்றல் மிளகாயை உடைத்து, விதைகளை தனியாக பிரித்து எடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு மூன்று படி அளவில் விதை மிளகாய் பிரித்து எடுக்கப்பட்டு, போதுமான மழை பெய்தவுடன் விதைப்பதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி பஞ்சா கூறுகையில், ‘மிளகாய் விதைப்பதற்கு லேசான மழை போதும். விதைப்பதற்கு நிலத்தை தயார் நிலையில் வைத்துள்ளோம். மழை பெய்தவுடன், மிளகாய் விதையை விதைத்து விடுவோம். அதனால் மிளகாய் விதைகளை தயார் நிலையில் பிரித்து வைத்துள்ளோம்’ என்றார்.

Tags : Ramanathapuram district ,Sivagangai , Sivaganga, Ramanathapuram, Bomb Chilli, Farmers
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு