×

முத்துப்பேட்டை பாமணி, கோரையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயத்திற்கு பயனின்றி கடலுக்கு செல்ல திறந்து விடப்பட்ட காவிரிநீர்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பாமணி, கோரையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயத்திற்கு பயனின்றி கடலுக்கு செல்ல காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய விவசாய நிலங்களுக்கு கோரையாறு, மரைக்கா கோரையாறு, கிளந்தாங்கி ஆறு, வளவனாறு மற்றும் பாமணியாற்றின் மூலமாக நீர்ஆதாரம் கிடைக்கிறது. இதன்மூலம் சுமார் 13ஆயிரத்து 323 எக்டேர் விளைநிலங்கள் பாசனவசதியை பெறுகின்றன. இந்த ஆறுகளிலிருந்து பாசன வாய்க்கால்கள் மூலம் பிரிந்து சென்று ஒன்றியம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் குட்டைகள் உட்பட நீர்நிலைகள் நிரம்பி வருவது வழக்கம். இதில் முத்துப்பேட்டை நகரை ஒட்டியுள்ள மங்கள் ஏரி, பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளுக்கு இப்பகுதியில் செல்லும் பாமணியாறு, கோரையாறு ஆகிவைகள் மூலம் பிரியும் வாய்க்கால் வழியாக செல்கிறது.

அதேபோல் செல்லும் ஆறுகளிலிருந்து முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் உள்ள ஏரிகள், குளம், குட்டை போன்ற தனியார் மற்றும் அரசு நீர்நிலைகளும் நிரம்புவதும் வழக்கம். தற்பொழுது சென்ற மாதம் திறந்துவிடப்பட்ட காவிரிநீர் கல்லணைக்கு வந்து சேர்ந்து பின்னர் அங்கிருந்து சமீபத்தில் திறக்கப்பட்டு நீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலப்பு அணைக்கு வந்த காவிரி தண்ணீர் வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகியவற்றின் பாசன வசதிக்கு திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடைமடை பகுதியான முத்துப்பேட்டை பகுதிக்கு வந்து கடல் முகத்துவாரம் ஓட்டி வரை உள்ள ஆறுகளின் தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளும் ஒரு மினி கடல் போன்று தண்ணீர் தேங்கி காட்சி அளிக்கிறது. ஆனால் அதனை சார்ந்த முத்துப்பேட்டை பகுதி நீர் நிலைகள் இன்னும் வறண்டே காணப்படுகிறது. இந்தநிலையில் ஆறுகளில் கடல்போல் தேங்கி நிற்கும் இந்த காவிரி நீர் இப்பகுதியில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் குளம் குட்டை போன்ற நீர்நிலைகள் முறையாக தூர் வராததால் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நிலத்தடிநீருக்கும் எந்தவிதமான பிரோஜனம் இல்லாமல் வீணாக விரைவில் கடலில் செல்ல தயார்நிலையில் இருந்தது.
இந்நிலையில் இரண்டு நாட்களாக இரவில் இப்பகுதியில் பெய்த மழையால் இப்பகுதியில் செல்லும் பாமணியாறு, கோரையாறு ஆகியவைகளில் நீர்வரத்து அதிகளவில் உள்ளது. இதனையடுத்து நேற்றுமுதல் கோரையாற்றில் உள்ள ஆசாத்நகர் தடுப்பணையில் கடலுக்கு சென்றடைய 3 பலகை திறந்து விடப்பட்டுள்ளது.

அதேபோல் தம்பிக்கோட்டை பேட்டை ஆகிய பகுதியில் செல்லும் பாமணியாற்றிலும் இரண்டு தினங்களாக அதிகளவில் தண்ணீர் வருவதால் நேற்று நான்கு பலகைகள் பாதியளவில் திருகப்பட்டது. இதனால் இரு தடுப்பணைகளிலும் காவிரி நீர் விவசாயத்திற்கு பயனின்றி கடலில் சென்று அடைகிறது. பழுதடைந்த தடுப்பணைக்கு பயந்து திறந்துவிடப்பட்டதா?:இந்த இரு ஆறுகளிலும் உள்ள தடுப்பணைகள் கடந்த கஜா புயலின்போது சேதமாகியது. இதனை சீரமைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் சீரமைக்காமல் இரண்டு தடுப்பணைக்கும் வர்ணம் பூசி அழகு படுத்தினர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில்: அதிகளவில் தண்ணீர் வரத்து உள்ளதால் பழுதடைந்த தடுப்பணைகள் இடிந்து சேதமாகிவிடும் என்ற அச்சத்தில் திறந்துவிடப்பட்டு இருக்க கூடும் என்றனர்.

Tags : Muthupettu Pamani ,Koraiyar , Muthupettai, Pamani, Cauvery water
× RELATED காரிச்சாங்குடி, வரதராஜபெருமாள்...