×

மயிலாடுதுறை அருகே கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: விவசாயிகள் அவதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வழுவூரில் நெல்கொள்முதல் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் கொள்முதல் நிலையத்தில் நெல்லுடன் காத்திருந்த விவசாயிகள் திடீரென பெய்த மழையில் நனைந்ததால் நெல்மணிகள் முளைக்கும் நிலைமைக்கு சென்றுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்காத போதும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாக்களில நிலத்தடிநீரை பயன்படுத்தி ஒரு லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு தற்போது அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசின் நிதி உதவி உடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு 41 இடங்களில் திறந்துள்ளது. ஆனால் அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 1ம்தேதி முதல் நெல் கொள்முதல் கூடுதலாக செய்யப்படும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் அமைச்சர் ராமவிலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தார். அதையடுத்து நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால் நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. அரசின் அறிவிப்பை நம்பி விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவடையான நெல்மூட்டைகளை அடுக்கி வைத்திருந்த நிலையில் திடீரென நேற்றுமுன்தினம் பெய்த கனமழையால் நெல்மூட்டைகள் அனைத்தும் நனைந்துபோனது. மறுநாள் அவற்றை விவசாயிகள் அவிழ்த்துக்கொட்டி காய வைத்துள்ளனர். கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா, திறக்கப்படாதா என்ற அச்சத்திலேயே விவசாயிகள் தினந்தோறும் நெல்கொள்முதல் நிலையத்திற்குச் சென்று வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் வேதனையில் விரக்தியில் இந்த நெல்லை காயவைத்தாலும் ஈரப்பதம் 17சதவீதம் இருக்கவேண்டும் என்பதாலும், கொள்முதல் நிலைய ஊழியர்கள் 40 கி.கி. மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என முன்கூட்டியே பணத்தை கொடுத்தால்தான் மூட்டைகளையே பிடிப்பார்கள், இல்லை என்றால் பல நாட்கள் காத்திருக்க வைத்து விடுவார்கள். மேலும் மூட்டைக்கு 2 கிலா நெல்லை அதிகமாக எடை வைத்துக்கொள்வார்கள். இதனால் விவசாயிகள் தங்களது நெல்மூட்டைகளை தனியாரிடம் விற்பனை செய்ய முடிவெடுத்து எடுத்துச்செல்கின்றனர். வேறு வழியின்றி பல விவசாயிகள் நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை, அரசிடம்தான் விற்கவேண்டும் என்று காத்திருக்கும் விவசாயிகளுக்காவது அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும் என்று வழுவூர் பகுதி விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். திறக்காத கொள்முதல் நிலைய வளாகத்தில் நெல்லுடன் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக காத்திருக்கின்றனர்.

Tags : Mayiladuthurai , Mayiladuthurai, Purchasing Station, Paddy Bundles, Farmers
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...