×

அதிமுக பேனரால் சுபஸ்ரீ மரணம் எதிரொலி; தமிழகம் முழுவதும் 20,000 பேனர்கள், கொடிகள், மற்றும் கட்அவுட்டுகள் அகற்றம்

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் 20,000 பேனர்கள், கொடிகள், மற்றும் கட்அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், வியாபாரிகள், தனியார் சார்பில் சாலையோரம் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,500 கொடிகள், பேனர்கள், கட்அவுட்டுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை பள்ளிகரணையில் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

‘மனித உயிர்கள் அதிகாரிகளுக்கு அவ்வளவு கேவலமாகிவிட்டதா? இந்த நாட்டில் மனித உயிருக்கு மரியாதை இல்லை. சாலையில் சிந்தும் மனித ரத்தத்தின் மீது நின்று கொண்டு அரசியல் செய்கிறீர்கள். எவ்வளவு நாள் மனித ரத்தத்தை குடிப்பீர்கள்’ என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்தது.

மேலும் இறந்துபோன சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம் தரவேண்டும் என்றும் அந்த தொகையை தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் சாலைகள், நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கும் கலாச்சாரத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தவிர திமுக, அதிமுக, பாமக, அமமுக, உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பேனர் வைக்க தடை விதித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 20,000 பேனர்கள், கொடிகள், மற்றும் கட்அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளது.

Tags : death ,Subhasree ,Removal ,AIADMK ,Tamil Nadu , High Court, Banner, Cutout, Flags, Political Parties, Subhasree, AIADMK Banner
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு