×

திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்

*பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கம்

திருவண்ணாமலை :  ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் நேற்று இரவு விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு, கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. எனவே, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

அதன்படி, இந்த மாத (ஆவணி) பவுர்ணமி கிரிவலம் நேற்று காைல 8.15 மணிக்கு தொடங்கியது. பவுர்ணமி தொடங்கியதில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேரம் ஆக ஆக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு 9 மணிக்கு பிறகு கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. மேலும், மழையில் நனைந்தபடி பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் ஆன்மிக அமைப்பு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள், ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகே பக்தர்களால் சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. வழக்கம்போல் கோயிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

 மேலும், கிரிவலத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே இயக்கியது. அதன்படி, இந்த ரயில் நேற்று இரவு 9.45 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைந்தது.
அதேபோல், மறுமார்க்கத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.55 மணிக்கு வேலூர் சென்றடைந்தது.

மேலும், விழுப்புரத்தில் இருந்து  நேற்று இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைந்தது. பின்னர்,இன்று அதிகாலை 3.15 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடைந்தது.  கிரிவலத்தையொட்டி எஸ்பி சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 10.20 மணிக்கு பவுர்ணமி நிறைவடைகிறது.

Tags : Thiruvannamalai Thiruvannamalai , Girivalam,Full moon Day,Tiruvannamalai ,Devotees , Thiruvannamalai
× RELATED கார் கண்ணாடி உடைத்து லேப்டாப்,...