×

திருமானூர் அருகே கண்டராதித்தத்தில் 1,500 ஏக்கர் செம்பியன் மாதேவி ஏரி ஆக்கிரமிப்பால் 467 ஏக்கரான அவலம்

*முறையாக வாய்க்கால்கள் தூர்வாராமல் அரசு நிதி ரூ.1,250 கோடி வீணடிப்பு

அரியலூர் : திருமானுார் அருகே கண்டராதித்தத்தில் 1,500 ஏக்கர் செம்பின் மாதேவி ஏரி ஆக்கிரமிப்பால் 467 ஏக்கரானது. முறையாக வாய்க்கால்கள் துார்வாராமல் அரசு நிதி ரூ.1,250 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் பகுதி டெல்டாவாக உள்ளது. இந்த பகுதிகளுக்கு திருச்சி மாவட்டம் முசிறி வாத்தலை அருகேயுள்ள புள்ளம்பாடி கால்வாய் திட்டம் மூலமாக தண்ணீர் பெறப்படுகிறது. அரியலூர் மாவட்ட எல்லை ஆரம்பமாகும் இடத்தில் மானோடை பெரிய ஏரி, வெங்கனூர் ஆண்டி ஓடை பெரிய ஏரி, கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி, சுக்கிரன் ஏரி உட்பட திருமானூர் ஒன்றியத்தில் சுமார் 40 ஏரிகள் தண்ணீர் பெறுகின்றன. இதனால் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அதேபோல், தா.பழூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு பொன்னாற்று மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. அதேபோல், திருமானூர் அருகேயுள்ள கண்டராதித்தம் சோழமாதேவி ஏரிக்கு புள்ளம்பாடி அருகேயுள்ள ஆலம்பாடி மேட்டுத்தெரு அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து நந்தியாறு வழியாக தண்ணீர் பெறப்படுகிறது. இதன் மூலம் கண்டராதித்தம், இலந்தைகூடம், பாளையபாடி, அன்னிமங்கலம், காரைப்பாக்கம், திருமானூர், திருவெங்கனூர் உட்பட அப்பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒரு காலத்தில் இந்த பகுதி குறுவை, சம்பா என இருபோகமும் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக, வரத்து வாய்க்கால்கள், ஏரி, குளங்கள், வடிகால்கள் முறையாக தூர்வாரததால் ஒரு போக சம்பா நடவுக்கே விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.


alignment=



மேலும், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்தில் பெய்யும் மழையினால் ஆகஸ்ட் மாதங்களில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரானது, எந்த ஏரி, குளங்களுக்கும் செல்லாமல் வீணாக கடலில் சென்றே கலக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக ஆற்றில் மணல் குவாரிகள் அமைத்து அதிகளவு மணல் எடுக்கப்படுவதும் ஒரு காரணமாகும். ஆறுகளிலிருந்து ஏரிகளுக்கு பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் மேடாகவும், ஆறுகள் பள்ளமாகவும் இருப்பதினால், தண்ணீர் ஏரிகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதேபோல், திருமானூர் அருகேயுள்ள கண்டராதித்தம் கிராமத்தில் உள்ள செம்பியன் மாதேவி பேரேரி 1000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டராதித்த சோழனால் சுமார் 1,500 ஏக்கரில் வெட்டப்பட்டது. இதன் மூலம் 25,000 ஏக்கர் அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 467 ஏக்கர் அளவில் சுருங்கி விட்டது. அதனையும் முறையாக தூர் வாராததால் கருவேல மரங்கள், புதர் மண்டியும், மண்மேடாகியும் காட்சி அளிக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் 65 கி.மீ. தொலைவிற்கு கொள்ளிடம் சென்றாலும் மேடாக உள்ள மாவட்டத்தின் நிலப்பரப்புகளில் தண்ணீர் கொண்டு வருவது சிரமமாக உள்ளது.

மேலும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டி பம்பிங் செய்து மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள், வெட்டி முடிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் நீரைத் தேக்குவதன் மூலம் ஆண்டு முழுவதும் விவசாயத்தை செய்யலாம். தற்போது 11,250 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதை இருவழி சாலைகளை நான்கு வழி சாலையாக அகலப்படுத்துவது போல இந்த காவிரியில் இருந்து புறப்படும் புள்ளம்பாடி வாய்க்கால் அரியலூர் மாவட்ட கடைசிவரை இரு மடங்கு நீரை கொண்டு வரும் வகையில் இரு மடங்காக அகலப்படுத்தி உயர்த்த வேண்டும்.

அப்போதுதான் வெள்ள காலங்களில் காவிரியில் உபரியாக வரும் நீரை அதில் கொண்டுவந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் விரைவாக நிரப்ப முடியும். தற்போது 26 ஏரிகளில் மட்டுமே காவிரி நீர் நிரம்புகிறது. அதை அரியலூர் மாவட்டத்தில் சுமார் 100 ஏரிகளில் அந்த காவிரி நீரை நிரப்பும் வகையிலே புள்ளம்பாடி வாய்க்காலில் உள்ள ஏரிகளில் இருந்து இணைப்புகள் ஏற்படுத்தி 100 ஏரிகளில் நீரை தேக்கி மேம்படுத்த தமிழக அரசு தற்போது ஆய்வு செய்யவேண்டும் என்று அரியலூர் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், செம்பியன் மாதேவி ஏரி சோழ மாமன்னன் கண்டராதித்த சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் 1,500 ஏக்கர் பரப்பளவில் வெட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவிக்கிறார். மேலும் அக்காலத்திலேயே மழை நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இந்த ஏரிக்கு நீர் வரத்தானது திருச்சி மாவட்டத்திற்கும் பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் அருகே உள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் உற்பத்தி ஆகும் நந்தியாறு மற்றும் திருச்சி மாவட்டம் காணக்கிளியநல்லூர் பகுதியில் உற்பத்தியாகும் கூழையாறு, வந்தலை கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் மானோடை ஆகிய ஓடைகளின் நீரானது திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள நத்தமாங்குடி கிராமத்தில் முக்கூட்டுத்துறை என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து உபரியாக நீர் வரும் போது கொள்ளிடத்தின் உட்புகும்.

அதே நேரத்தில் கொள்ளிடத்தில் நீர் அதிகம் வரும்போது மலையப்ப வாய்க்கால் மூலமாக செம்பியன் மாதேவி பேரேரிக்கு திருச்சி மாவட்டம் நத்தமாங்குடி, தின்னக்குளம், விரகாலூர், ஆலம்பாடி மேட்டுத்தெரு வரை திருச்சி மாவட்டத்தில் பயணித்து அரியலூர் மாவட்ட எல்லையான செம்பியக்குடி, குலமாணிக்கம், வைத்தியநாதபுரம், இலந்தைக்கூடம் வழியாக செம்பியன் மாதேவி ஏரிக்கு நீர் வருகிறது. மலையப்ப வாய்க்கால் முழுமையாக கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை. வரத்து வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்பட்டிருந்தால் இந்த ஏரிக்கு நந்தியாறு கூழையாறு மானோடை ஆகிய ஓடைகளின் மழை நீர் வந்து நிரம்பி இருக்கும். தற்போது இந்த ஏரியில் ஒரு சொட்டு நீர் கூட தற்போது இல்லை. இதற்கு முழு காரணம் ஏரி தூர்வாரப்படவில்லை. அதோடு மதகுகளும் தண்ணீர் தேக்க முடியாமல் ஓட்டையாக உள்ளது. அதன் வழியே நீர் அப்படியே வெளியேறி விடுகிறது.

சிதிலமடைந்த மதகுகளை சரி செய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்படுத்த பர்மிட் வாங்க லஞ்சம் கேட்பதும் தொடர்கதையாகி வருகிறது. மேலும் இந்த ஏரிக்கான உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரிகள் எல்லோரும் திருச்சி மாவட்டத்தில் உள்ளனர். இதனால் விவசாயிகள் ஏரியைத் தூர்வார அனுமதி என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுவது வேதனைக்குரியது. இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் நீரின்றி அவதிப்படுவார்கள். வீணாக கடலில் நீர் கலக்கும் நிலை தொடரும். நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பானது ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போலாகிவிடும் என்றனர்.

Tags : forest ,Thirumur , Ariyalur ,Thirumanur ,Sempian Mathevi Lake
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...