×

கடத்தூர் பகுதியில் விளைச்சல் அமோகம், விலை வீழ்ச்சி சாலையோரத்தில் தக்காளியை கொட்டிச்செல்லும் விவசாயிகள்

*வாடகை கொடுத்து கட்டுப்படியாக வில்லை என்கிறார்கள்

கடத்தூர் : கடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் தக்காளி விலைச்சல் அமோகமாக  உள்ளது. ஆனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விற்பனையாகாத  தக்காளியை சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டிச்செல்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி  தாலுகா கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒடசல்பட்டி, மணியம்பாடி,  சில்லாரஅள்ளி, நத்தமேடு, புட்டிரெட்டிபட்டி, சிந்தல்பாடி, இராமியணஅள்ளி  உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி  சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளி, தர்மபுரி  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

வாரச்சந்தை,  தினசரி சந்தை மற்றும் உழவர் சந்தைக்கும் விவசாயிகள் நேரில் கொண்டுசென்று  விற்பனை செய்து வருகி்றனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த வாரம் ஒரு கிலோ  தக்காளி ₹10க்கு விற்பனையானது. தற்போது மாவட்டத்தில் தக்காளி விளைச்சல்  அதிகரித்து விற்பனைக்கு வரத்தும் அதிகரித்துள்ளதால் தக்காளி ₹5 முதல் ₹7  வரையே விற்பனை ஆகிறது.

வேலையாட்களுக்கு நாளொன்றுக்கு ₹200 கூலி கொடுத்து  தக்காளியை பறித்து, வண்டி வாடகை கொடுத்து மார்க்கெட் மற்றும் சந்தைக்கு  தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். விலை சரிவால் விறபனையாகாத  தக்காளியை திரும்ப எடுத்துச்செல்ல மீண்டும் வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. இது  கட்டுப்படி ஆகாது என்பதால் தக்காளியை சாலையோரம் கொட்டிவிட்டு விவசாயிகள்  செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


Tags : area ,Kadathur ,road , Tomato ,Well Growth,low farmers,roadsides
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...