×

கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 லட்சம் கேட்டு இளம்பெண் கடத்தல் : சிசிடிவி இயங்காததால் போலீசார் திணறல்

சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அதிகாலை வந்த இளம்பெண் கடத்தப்பட்டார். கடத்திய நபர்கள் 10 லட்சம் கேட்டு அவரது தந்தை, சகோதரருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் விக்னேஷ் (24), மகள் வித்யா (22). இவர்களில் விக்னேஷ், சிறுசேரியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வித்யா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்கிறார்.  அண்ணனும், தங்கையும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், திருநள்ளாறில் உள்ள தனது நண்பரின் திருமணத்திற்கு வித்யா சென்றார். பன்னர், திருமணம் முடிந்து காரைக்காலில் இருந்து அரசு பஸ்சில் ஏறி கோயம்பேடு பஸ் நிலையம் வந்து விட்டதாக, தனது அண்ணனுக்கு நேற்று முன்தினம் காலை தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று காலை தந்தை ஆறுமுகத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், வித்யாவை தாங்கள் கடத்தி விட்டதாகவும், 10 லட்சம் கொடுத்தால் ஒப்படைப்பதாகவும், பணத்தை தயார் செய்துவிட்டு தகவல் தெரிவிக்குமாறும் மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டனர். பிறகு சிறிதுநேரத்தில் விக்னேஷை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், அவரிடமும் 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

தனது தங்கை கடத்தப்பட்டதை தான் எப்படி நம்புவது என்று கேட்டதால், வித்யாவிடம் செல்போன் கொடுத்து பேச வைத்துள்ளனர். அதில் ‘‘கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலையில் மர்ம நபர்கள் தன்னை கடத்தி விட்டனர். அண்ணா தன்னை சீக்கிரம் காப்பாற்று,’’ என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து, செல்போன் இணைப்பை ஆசாமிகள் துண்டித்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் லதா, இணை கமிஷனர் விஜயகுமாரி என்பவருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இணை கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 5 இன்ஸ்பெக்டர்கள், 2 பெண் இன்ஸ்பெக்டர்கள் என தனிப்படை அமைத்து வித்யா கடத்தப்பட்டது குறித்தும் கடைசியாக வந்த செல்போன் இணைப்பு பற்றியும் தீவிரமாக விசாரித்து வரு கின்றனர்.
வித்யா உண்மையாகவே கடத்தப்பட்டாரா அல்லது கடத்தல் நாடகமா என்பது குறித்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாகவே ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமரா இயங்கவில்லை. அதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிசிடிவி கேமரா இயங்காதது குறித்து தகவல் அறிந்த ஆசாமிகள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். சிசிடிவி கேமரா இருந்திருந்தால் உடனடியாக குற்றவாளியை பிடித்திருக்கலாம். கோயம்பேட்டில் சிசிடிவி கேமரா சரியாக இயங்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags : teenagers ,bus stand ,Coimbatore , 10 lakh ,teenagers abducted ,coimbatore bus stand
× RELATED திருச்சி பஸ் ஸ்டாண்டில் முதியவர் திடீர் சாவு