×

இயற்கை பேரிடரை கருத்தில் கொண்டு கோட்டூர்புரத்தில் 4 அடுக்கு கொண்ட குடியிருப்பு மட்டுமே கட்ட வேண்டும்

* குடிசை மாற்று வாரிய இயக்குனரிடம் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மனு

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனரை நேற்று நேரில் சந்தித்து  கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் முதல் திட்ட பணியாக கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு, ஜெயபிரகாஷ் நாராயணனால் 7.5.1973ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அந்த குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு அரை நூற்றாண்டை நெருங்கும் தருணத்தில், அஸ்திவார ஸ்திரத்தன்மை என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே தான் 2006ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசினால், 30 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டி முடிக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை எல்லாம் இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை அவை அமைந்திருக்கிற இடங்களிலேயே கட்டித்தருவது என்று முடிவெடுக்கப்பட்டது.

அந்த வகையில் கோட்டூர்புரத்தில் 8 பிளாக்குகள், ராணி அண்ணாநகர், வியாசர்பாடி, பெரம்பூர் போன்ற பல்வேறு இடங்களில் புதிய 4 அடுக்குகளை கொண்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டித்தரப்பட்டு, அங்கு ஏற்கனவே குடியிருந்த அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்கப்பட்டது.கடந்த 9 ஆண்டுகளாக பணிகள் ஏதுவும் நடைபெறாத நிலையில், இப்போது வாரிய நிர்வாகம் கோட்டூர்புரத்தில் உள்ள பழைய 3 அடுக்குகளை கொண்ட குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக 14 அடுக்குகளை கொண்ட குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டிருப்பதாக அறிகிறோம்.

ஒரு சிறிய அளவிலான நிலப்பரப்பை கொண்ட அடையாற்றின் கரையோரம் அமைந்துள்ள கோட்டூர்புரம் ஒவ்வொரு பருவமழைக்கும் பெரிய அளவிலான பாதிப்புக்குள்ளாகிறது. இந்த நிலையில் 1476 குடியிருப்புகளை இடித்து விட்டு 2975 குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டிருப்பது சரியான முடிவாக தெரியவில்லை. மின்தடை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற நேரங்களில் அந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. எனவே, திமுக ஆட்சியில் திட்டமிட்டது போல 4 அடுக்குகளை கொண்ட குடியிருப்புகளை கட்டி, அங்குள்ள குடியிருப்புதாரர்களுக்கு மட்டும் வீடுகளை வழங்கி, அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : disaster ,dwellings , Considering the natural disaster, only 4 storied dwellings , Koturpuram
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...