×

தள்ளாடும் தமிழ் தலைவாஸ்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சென்னை: புரோ கபடி தொடரில்  தொடர் தோல்வியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ் தலைவாஸ் அணி, இன்று நடைபெறும் போட்டியில் வலுவான அரியானா ஸ்டீலரை எதிர்கொள்கிறது, புரோ கபடி தொடரில் 5வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி அறிமுகமானது. அந்த சீசனில் மட்டுமின்றி 6வது சீசனிலும் அந்த அணிக்கு கடைசி இடம்தான் கிடைத்தது. இப்போது நடைபெறும் 7வது சீசனில் வெற்றியுடன் தொடங்கியது தமிழ்தலைவாஸ். ஆனால் அடுத்து 2 தோல்வி. தொடர்ந்து ஒரு வெற்றி, ஒரு சமன், ஒரு வெற்றி என சற்று வலுவான நிலையில்தான் இருந்தது  தலைவாஸ்.  தோற்ற போட்டிகளிலும் மிக குறைந்த புள்ளிகள் தான் வித்தியாசம். அந்த உற்சாகத்துடன் சொந்த களமான சென்னையில் விளையாடியது. அதில் ஒரு சமன், 3 தோல்வி.  அதன் பிறகு வெளியூரில் விளையாடிய 5 போட்டிகளிலும்  தோல்வி.

இப்படி தொடர் தோல்விகளால்  தலைவாஸ் பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் பதவி விலகினார். மூத்த வீரர்கள் அவர் சொல்வதை கேட்பதில்லை என்பதுதான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ஜே.உதயகுமார் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த 2 போட்டியிலும்  தலைவாஸ் அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆக இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 3  வெற்றி, 2 சமன், 10 தோல்விகளுடன் 27  புள்ளிகளை பெற்று  புள்ளி பட்டியலில்  கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் பூனேவில் இன்று நடைபெறும் போட்டியில் அரியானா ஸ்டீலரை எதிர்கொள்கிறது  தமிழ் தலைவாஸ். இந்த தொடரில் ஏற்கனவே அந்த அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் இன்று தலைவாஸ் களம் காணும். ஆனால் அது பழைய கதை. அரியானா  இப்போது வலுவான நிலையில் இருக்கிறது. தமிழக வீரர் தர்மராஜ் சேரலாதன் தலைமையிலான அரியானா இதுவரை 14 போட்டிகளில் விளையாடி ஒரு சமன், 4 தோல்வி, 9 வெற்றிகளுடன் 49 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. அதிலும் கடந்த 6 போட்டிகளில் ஒரு தோல்வியை விட சந்திக்கவில்லை.

அந்த அணியின்  விகேஷ் கண்டோலா, பிரசாந்த்குமார் ராய், செல்வமணி உட்பட பலரும் கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால்  தலைவாஸ் அணியில் ரொம்ப சுமாராக விளையாடினாலும்  ராகுல் சவுத்ரி, மஞ்சித் சில்லர் ஆகியோருக்கு ஓய்வு தருவதில்லை. நன்றாக விளையாடும் அஜித்குமாரை அதிகம் பயன்படுத்துவதில்லை. அதனால் தமிழ் தலைவாஸ் அணி  இன்றைய போட்டியில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால், அரியானாவை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.  தகுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் தக்க வைக்கலாம்.

Tags : Talawas , Tamil Talawas, Returning to the Victory Path?
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...