×

‘பிரக்சிட் சட்டத்தை மீறினால் முறியடிப்பேன்’ இங்கிலாந்து பிரதமருக்கு சபாநாயகர் எச்சரிக்கை

லண்டன்: ‘‘பிரக்சிட் சட்டத்தை மீற பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சித்தால் அது முறியடிக்கப்படும்’’ என இங்கிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரக்சிட் காலக்கெடு அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குள் பிரக்சிட் ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், பிரக்சிட்டை நிறைவேற்ற புதிய ஒப்பந்தம் கொண்டு வர வேண்டுமெனவும், முடியாவிட்டால் பிரக்சிட்டுக்கான காலக்கெடுவை 3 மாதத்திற்கு நீட்டிக்க வேண்டுமெனவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.

இது, ஒப்பந்தமில்லா பிரக்சிட்டை நிறைவேற்ற முயற்சிக்கும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால், கடும் சிக்கலில் இருக்கும் பிரதமர் ஜான்சன், எக்காரணம் கொண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்பதில் மட்டும் உறுதியாக உள்ளார். ஒப்பந்தமில்லா பிரக்சிட்டை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்றத்தை 5 வார காலத்திற்கு அவர் முடக்கி உள்ளார். இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோ லண்டனில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மட்டுமே பிரக்சிட்டை பிரதமர் நிறைவேற்ற வேண்டும். இதற்கான சட்டத்திற்கு அவர் கட்டுப்பட வேண்டும். பிரக்சிட்டின் புதிய சட்டத்தை அவர் மீறினால், சமூகத்திற்கு தவறான ஒரு முன்னுதாரணமாகி விடுவார். அதேசமயம், பிரக்சிட் விவகாரத்தில் பிரதமர் சட்டத்தை மீற நினைத்தால், அதை சட்டத்திற்கு உட்பட்டு முறியடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்,’’ என்றார்.


Tags : Speaker ,UK ,Brexit , Speaker warns, UK Prime Minister , breaking Brexit law
× RELATED ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட...