×

இளவரசர் சல்மானின் அறிவிப்பால் வண்ண உடைகளுக்கு மாறும் சவுதி பெண்கள் : எதிர்ப்புகள் நின்றபாடில்லை

ரியாத்: சவுதி அரேபியாவில் மத கட்டுப்பாடுகளில் ஒன்றாக இருந்து வரும் பர்தாவுக்கு அந்நாட்டு பெண்கள் விடை கொடுத்து வருகின்றனர். பொது இடங்களில் அவர்கள் வண்ண ஆடைகளுடன் வலம் வருவது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சவுதி அரேபியாவில் அந்நாட்டு பெண்கள் பர்தா, முகத்திரை அணிவது கட்டாயம். பொது இடங்களில் எங்கு பார்த்தாலும் பெண்கள் கருப்பு அங்கி அணிந்து, முகத்திரையை மூடியபடி செல்வார்கள். ஆனால், ‘இது போன்று கட்டாயமாக பர்தா அணிய வேண்டுமென இஸ்லாமிய மத கோட்பாடுகளில் எதுவும் கூறப்படவில்லை,’ என சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்தாண்டு தனது பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.‘ஆண்களுக்கு நிகரான கண்ணியமான உடைகளை பெண்கள் அணிய வேண்டும் என்றே இஸ்லாமில் கூறப்பட்டுள்ளது. முழு நீள பர்தா அணிய வேண்டியதில்லை, எனவே, இதுதொடர்பான உடை கட்டுபாட்டை தளர்த்தலாம்,’ என்றும் அவர் கூறினார். இளவரசர்  முகமது பின் சல்மான் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது முதலே சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, விளையாட்டுக்களில் பங்கேற்க அனுமதி என பல்வேறு சீர்த்திருத்தங்களை  கொண்டு வந்த வண்ணம் உள்ளார்.

எனினும் உடைக் கட்டுப்பாட்டில் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் சவுதி அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், இளவரசரின் பேட்டிக்கு பிறகு, சில பெண்கள் தங்களின் பர்தாக்களை துறக்க முன்வந்துள்ளனர். ரியாத்தில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் கடந்த வாரம் பெண் ஒருவர் ஆரஞ்ச் நிற டாப், வெள்ளை நிற பேன்ட், காலில் ஹீல்ஸ் அணிந்தபடி நடந்து சென்றது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரது புகைப்படங்கள் உலக அளவில் வைரலாகி வருகின்றன.அந்த பெண், 33 வயதாகும் மாஷல் அல் ஜலாத். மனித வள மேம்பாட்டுத்துறை நிபுணராக பணியாற்றி வருகிறார். அவர் கூறுகையில், ‘‘எனக்கு பிடித்தபடி சுதந்திரமாக, எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழ நான் ஆசைப்படுகிறேன். எனக்கு பிடிக்காத ஒரு ஆடையை அணிய யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது,’’ என்கிறார். இதேபோல், 25 வயதாகும் மனாஹெல் ஒடைபி என்பவர் கூறுகையில், ‘‘கடந்த 4 மாதமாக நான் பர்தா இன்றி, எனக்கு பிடித்த வண்ண ஆடைகளில்தான் பொது இடங்களுக்கு சென்று வருகிறேன்,’’ என்கிறார். இதுபோல் பர்தா இன்றி பெண்கள் பொது இடத்திற்கு வரும் வழக்கம், சல்மான் பேட்டிக்கு பிறகு மிக சமீபத்தில் தான் சவுதியில் அதிகரித்துள்ளது. அதே சமயம்,  இவர்களுக்கு மத அமைப்புகளால் அச்சுறுத்தலும் இருக்கிறது.

Tags : women ,Saudi ,Prince Salman ,protests ,announcement , Saudi women ,changing color dresses, Prince Salman's announcement, No protests
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது