×

அதிபர் டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க இந்தியாவை வலியுறுத்த வேண்டும்

வாஷிங்டன்: ‘காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு, இன்டர்நெட் உட்பட பல்வேறு தடைகளை நீக்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்,’ என அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அந்நாட்டு எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த மாதம் 5ம் தேதி ரத்து செய்தது. இதை கண்டித்து சில அமைப்பினர் போராட்டம் நடத்தலாம் என்பதால், காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போன் சேவை, இன்டர்நெட் சேவை ஆகியவை முடக்கப்பட்டன. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். காஷ்மீர் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடைகளை நீக்க இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். செனட் உறுப்பினர்கள் கிறிஸ் வான் ஹாலன், டாட் யங், பென் கார்டின், லிண்ட்சே கிரகாம், மற்றும் பாப் கேசே ஆகியோர் அதிபர் டிரம்ப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காஷ்மீரில் பல ஆண்டு காலமாக இருந்த நிலமையை இந்தியா திடீரென மாற்றியுள்ளது. இது, இந்தியா-பாகிஸ்தான் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.   காஷ்மீர் மக்கள், ஒவ்வொரு நாளும் சந்திக்கும் கஷ்டங்கள் அதிகரித்து வருகிறது. அங்கு தொலைத்தொடர்பு, இன்டர்நெட் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கவும், ஊரடங்கு உத்தரவை தளர்த்தவும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், இந்திய பிரதமர் மோடியை நீங்கள் வலியுறுத்த வேண்டும்.  பாகிஸ்தானுக்கு அமெரிக்க தூதரை நியமிக்கவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களை கவனிக்க துணை அமைச்சரை நிய மிக்கவும் டிரம்ப் நிர்வாகம் தவறிவிட்டது. அதனால், ஜம்மு காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. காஷ்மீரை சீர்குலைக்கும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தானும் தவிர்க்க வேண்டும். மனித உரிமை பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவுவதில் அமெரிக்கா முக்கிய பங்காற்றுகிறது. அதனால், காஷ்மீர் விவகாரத்தில் நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

காஷ்மீர் கிஸ்த்வரில் மீண்டும் ஊரடங்கு


காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் கிஸ்த்வர் மாவட்ட தலைவர் ஷேக் நசீரின் பாதுகாவலரிடம் இருந்த ஏகே-47 துப்பாக்கியை சிலர் பறித்துச் சென்றனர். இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், கிஸ்த்வரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் அங்கு முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

58 நாடுகள் ஆதரவா? இம்ரானுக்கு தர்ம சங்கடம்

ஐ.நா மனித உரிமை அமைப்பில் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. இது பற்றி இந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘காஷ்மீர் விவகாரத்தில் ஐநா மனித உரிமை அமைப்பில் உள்ள 58 நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன,’ என கூறியிருந்தார். ஆனால், ஐ.நா மனித உரிமை அமைப்பில் மொத்தம் 47 நாடுகள்தான் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால், இம்ரான் 58 நாடுகள் என கூறியிருப்பது கேலி, கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இஜாஸ் அகமது ஷா நேற்று அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீரில் இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களுக்கு மருந்து கூட கிடைக்கவில்லை. ஆனால், நாம் சொல்வதை உலகம் நம்பவில்லை. காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவைத்தான் உலகம் நம்புகிறது,’’ என்றார். இந்த பேட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Trump ,MPs ,US ,India ,Kashmir , US MPs letter to President Trump,urging India ,lift restrictions on Kashmir
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...