×

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய சின்மயானந்தாவின் படுக்கை அறைக்கு சீல் : 7 மணி நேர விசாரணைக்குப் பின் அதிரடி

ஷாஜகான்பூர்: சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சின்மயானந்தா மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு கூறினார். பின்னர், மாயமானார். அவர் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சின்மயானந்தா மீது பாலியல் தொல்லை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை உபி அரசு நியமித்தது.

இந்நிலையில், சின்மயானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் அந்த மாணவி கடந்த திங்களன்று புகார் கூறினார். இதனால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது. இதைத் தொடர்ந்து, மாணவி தங்கியிருந்த ஷாஜகான்பூரில் உள்ள பெண்கள் விடுதி அறையில் சிறப்பு விசாரணை குழுவினர் சோதனை நடத்தியதோடு அறைக்கு சீல் வைத்தனர். ஆனால், தனது அறையில் இருந்த முக்கியமான ஆதாரங்கள் சின்மயானந்தாவின் ஆதரவாளர்கள் எடுத்து சென்று விட்டதாக சிறப்பு விசாரணை குழுவிடம் அந்த மாணவி, கடந்த புதன்கிழமை புகார் தெரிவித்தார்.

இதனிடையே, சின்மயானந்தாவிடம் சிறப்பு விசாரணை குழுவினர் நேற்று விசாரணை நடத்தினார்கள். முன்னதாக, வியாழனன்று இரவு அவர் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டார். பின்னர், நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் முமுக்சூ ஆசிரமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, அவருடைய படுக்கை அறையில் சிறப்பு விசாரணை குழு ஆய்வு செய்தது. பிறகு, அந்த அறை சீல் வைக்கப்பட்டது. சின்மயானந்தாவிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் மந்தமாக செயல்படுவது ஏன்?

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாஜ அரசு,  பெண்கள் பாதுகாப்புக்காக எதையும் செய்யவில்லை என்பது அதன் நடவடிக்கைகள் மூலமாக தெளிவாகியுள்ளது. சின்மயானந்தா வழக்கில் மாநில காவல் துறை மந்தமான அணுகுமுறையை கையாள்வது ஏன்? இவை அனைத்துக்கும் மேலாக புகார் அளித்த பெண் எதற்காக ஊடகங்களின் முன் பாதுகாப்பு கேட்டு முறையிடுகிறார்? உபி. போலீசார் ஏன் மெத்தனமாக செயல்படுகின்றனர்? ஒருவேளை குற்றம்சாட்டப்பட்டவர் பாஜ.வை சேர்ந்தவர் என்பதாலா?” என்று கேட்டுள்ளார்.

Tags : Chinmayantha ,bedroom , Seal the bedroom , Chinmayantha, who was convicted of rape
× RELATED கொரோனா வைரஸ் பீதியால் ஹாலிவுட்...