×

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வெளிநாட்டு சீக்கியர்களின் பெயர் கருப்பு பட்டியலில் இருந்து நீக்கம்

புதுடெல்லி: இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த வெளிநாடுகளை சேர்ந்த 312 சீக்கியர்களின் பெயர்களை, அந்த பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. கடந்த 1980ம் ஆண்டுகளில் காலிஸ்தான் தனிநாடு கோரி, மத்திய அரசுக்கு எதிராக சீக்கியர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினர். அப்போது, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட சீக்கியர்கள் மீது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடும் நடவடிக்கை எடுத்தார். இதில் இருந்து தப்பிப்பதற்காக, ஏராளமான சீக்கியர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். பின்னர், அங்கிருந்தபடி இந்தியாவுக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபட்டனர். இவர்கள் அடையாளம் காணப்பட்டு, கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனால், இவர்களும், இவர்களின் குடும்பத்தினரும்  இந்தியாவிற்கு வருவதற்கு விசா பெறுவதற்கான தகுதிகளை இழந்தனர்.

இந்நிலையில், இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட சீக்கியர்களின் தற்போதைய பின்னணியை மத்திய உளவுத்துறைகளும், புலனாய்வு அமைப்புகளும் ஆய்வு செய்தன. இதைத் தொடர்ந்து, வௌிநாடுகளில் வசித்து வரும் 312 சீக்கியர்களின் பெயர்களை, கருப்பு பட்டியலில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “கருப்பு பட்டியலில் இருந்த வெளிநாடுகளை சேர்ந்த 314 சீக்கியர்களின் பெயர்களை மத்திய அரசு ஆய்வு செய்தது. இவர்களில் 312 பேரின் பெயர்கள் கருப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பேர் இந்த பட்டியலில் நீடிக்கின்றனர்,” என்றார். இதேபோல், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பராமரிக்கப்பட்டு வந்த வெளிநாட்டு சீக்கியர்களின் கருப்பு பட்டியலும் அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. பட்டியிலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட வெளிநாட்டு சீக்கியர்கள் இனி விசா பெற்று இந்தியாவில் உள்ள தங்களது குடும்பங்களை சந்திக்கலாம். உறவினர்களை மீண்டும் சந்திக்கலாம்.

Tags : Sikhs ,India , foreign Sikhs accused ,acting against India,removed from the black list
× RELATED பாகிஸ்தானில் சீக்கியருக்கு அமைச்சர் பதவி