×

பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் பலியான வழக்கு அதிமுக பிரமுகர் தலைமறைவு,..பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி,..பூனைக்கு மணி கட்டுவது யார்? சமூக ஆர்வலர்கள் ஆவேசம்

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனரால் பலியான பெண் இன்ஜினியர் வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.  சென்னை குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்த இன்ஜினியர் சுப (23) மீது அதிமுக பேனர் விழுந்ததால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது லாரி மோதி பலியானார். பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்யவில்லை. தற்போது கடும் நெருக்கடியைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், வீட்டு திருமணத்திற்காகத்தான் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனர்களில் ஒன்று முடிச்சு அவிழ்ந்த நிலையில் காற்றில் ஆடியபடி தொங்கிக்கொண்டு இருந்தது. சுப வருவதற்கு முன்பாக 3 பேர் கொண்ட குடும்பத்தினர் ஒரே பைக்கில் அந்த இடத்தை கடந்து சென்றனர். சுப  வந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த பேனர் அவரது ஸ்கூட்டர் மீது விழுந்தது. திடீரென பேனர் விழுந்து முகத்தை மறைத்ததால் அவர் நிலைதடுமாறி ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். அவர் சுதாரித்து எழுவதற்குள்ளாக பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி சுப மீது மோதியது.

லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.   இந்த விபத்தின்போது சுப  தலைக்கு ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அவது உடல் மீது, தண்ணீர் லாரி ஏறி இறங்கியதில் ரத்தவெள்ளத்தில் சுப பலியானார். இதை கண்டதும் அப்பகுதி மக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் யாரும் உடனடியாக சம்பவம் நடந்த இடத்துக்கு வரவில்லை. இதையடுத்து வேறுவழியின்றி அப்பகுதி இளைஞர்கள் சிலர் அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்றை மடக்கி சுபயை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப  இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்வதா அல்லது பள்ளிக்கரணை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு போலீசார் வழக்குப்பதிவு செய்வதா என்பதில் அவர்களுக்குள் பெரிய போட்டா போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அரைமணி நேரத்துக்கு வாக்குவாதம் நடந்தது. இதனால் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவதிலும் தாமதம் ஏற்பட்டது. முடிவில் மவுண்ட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுபஸ்ரீயின் சடலம் காலை 11 மணி அளவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பகல் 1.30 மணியளவில் அவரது உடல் அதே பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.   இதற்கிடையே அதிமுக பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியான செய்தி வெளியானது. உடனே சமூக வலைதளங்களில் அதிமுக மற்றும் நீதிபதிகளை வறுத்தெடுத்து மீம்ஸ்கள் வேகமாக பரவியது. இதனால் சமூக ஆர்வலர்கள் பலரும் கொந்தளித்து கருத்துக்களை பதிவு செய்தனர். இதையறிந்த அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் சுபஸ்ரீயின் வீட்டுக்கும், மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும் சுப  வேலை செய்து வந்த தனியார் நிறுவனத்திலும் அவரது புகைப்படத்தை வைத்து உயர் அதிகாரிகள் மற்றும் சக நண்பர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் ஆங்கேங்கே சுபயின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர்.  

 இதற்கிடையே பரங்கிமலை  போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரை சேர்ந்த லாரி டிரைவர்  மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர்.   இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கோவிலம்பாக்கம்  எஸ்.கொளத்தூர், விநாயகபுரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள பேனர்  கடையை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.   இதுகுறித்து சென்னை மாநகராட்சி 189வது வார்டு உதவி  பொறியாளர் (பொறுப்பு) கமல்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் அனுமதி பெறாமல்  பேனர் வைத்ததாக காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும்,  முன்னாள் கவுன்சிலருமான ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜெயகோபாலை தேடி வருகின்றனர்.

 இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘விளம்பர பேனர் வைப்பதால் ஏற்படும் விளைவு குறித்து பல்வேறு விதிமுறை வகுக்கப்பட்டாலும் அதனை ஆட்சியாளர்கள் மதிப்பது இல்லை. அதிமுக ஆட்சியில் அரசியல் சட்டம் துளியும் மதிக்கப்படுவது இல்லை. பல்வேறு வழிகளிலும் விதிமீறல்கள் தொடர்கின்றன. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பூனைக்கு மணி கட்டுவது யார்? இனியும் காலம் தாழ்த்தாமலும், அரசியல் பேதம் இல்லாமலும் பேனர்கள் வைத்தவர்கள், அனுமதி கொடுத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ஆவேசமாக கூறினர்.

கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார்
பள்ளிக்கரணை பகுதியில் அதிக அளவில் நில மோசடி நடைபெறும். இதற்காக இந்தப் பகுதிக்கு பணிக்கு வருவதற்கு போலீசார் மத்தியில் கடுமையான போட்டி நிலவும். பள்ளிக்கரணைக்கு சமீபத்தில்தான் ஒரு போலீஸ் அதிகாரி பணி மாறி வந்தார். இதற்காக அரசியல்வாதிக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்துத்தான் இந்தப் பதவிக்கு வந்துள்ளார். இதற்கான பணத்தை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு ஆளும்கட்சி பிரமுகர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் பணியில் சேர்ந்தவுடன் ஆளும் கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்து, பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிமுக பிரமுகர்களுடன் சேர்ந்து பள்ளிக்கரணை போலீஸ்நிலையத்திலேயே பஞ்சாயத்து நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், வெளியில் ரோந்து செல்வது, சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போன்ற பணிகளில் சட்டம் ஒழுங்கு போலீசார் ஈடுபடுவதில்லை.

ஆளும் கட்சியைத் தவிர வேறு யாராவது இதுபோன்று பேனர் வைக்க அனுமதி கேட்டால், மாநகராட்சி, போக்குவரத்து போலீசார், வருவாய் துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி வரவேண்டும் என்று பள்ளிக்கரணை போலீசார் உத்தரவிடுவார்கள். ஆனால் நேற்று முன்தினம் விபத்து நடந்த பிறகும் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. நீதிமன்றம் கண்டித்த பிறகுதான் இரவில் வழக்குப் பதிவு செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர். தற்போது சென்னையில் பல்வேறு பதவிகளில் ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள்தான் பணியில் உள்ளனர். இதனால் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நினைத்தால் கூட அவர்களை மாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கே போலீசார் பயந்து வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் பணம் வாங்கிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Tags : Engineer ,activists , Banner, Female Engineer, Sacrifice, Prime Minister, Hideout
× RELATED பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ₹95 ஆயிரம் பறிமுதல்