×

பொதுமக்களுக்கு இடையூறாக கட்அவுட், பேனர் வைக்க கூடாது: அனைத்துக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: இளம்பெண் சுபஸ்ரீ மரணம் எதிரொலியாக, பொதுமக்களுக்கு இடையூறாக கட்அவுட், பேனர் வைக்க கூடாது என்று அனைத்து கட்சி தலைவர்கள் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை: அதிமுக நிகழ்ச்சிகளுக்கோ, இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை அன்புகூர்ந்து நிறுத்திவிட வேண்டும் என்று அதிமுகவினர் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் (பேனர்) வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிமுக நிர்வாகிகளும், அதிமுக தொண்டர்களும் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): பாமக நிகழ்ச்சிகளில் பதாகைகள்- கட்அவுட்களுக்கு இடம் கிடையாது. இந்த விதியை மீறுவது குறித்து பாமகவினர் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தமாகாவினர் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலைகளிலும், வீதிகளிலும், பொது இடங்களிலும் விளம்பரங்கள் செய்யக்கூடாது. டிடிவி.தினகரன் (அமமுக பொது செயலாளர்):  இனி வரும் நாட்களில் அமமுக  நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் இதுபோன்று சாலை  மையத்திலும், நடைபாதை ஓரங்களிலும் பதாகைகள் வைக்க கூடாது.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்):  தமிழக அரசுதான்  இந்த இறப்புக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக அரசின் கவனக்குறைவுதான் இறப்புக்கு முழு காரணம். இனிவரும் காலங்களில் இறப்பு ஏற்படுவதையும், விபத்து நடப்பதையும் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

Tags : party leaders , Public, Cutout, Banner, All Party Leaders 4
× RELATED குலசேகரம் அருகே டாரஸ் லாரி மோதி கணவருடன் பைக்கில் வந்த பெண் பலி