×

பத்து நாள் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி ஜீவசமாதி இப்போதைக்கு இல்லையாம்... ‘கூலாக’ அறிவித்தார் சிவகங்கை இருளப்பசாமி,..பரவசத்துடன் காத்திருந்த பக்தர்கள் ‘அப்செட்’

சிவகங்கை:  சிவகங்கை அருகே பாசாங்கரையில் இருளப்பசாமி என்பவர் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவரது ‘ஜீவசமாதி நாடகம்’ தோல்வியில் முடிந்ததால், காத்திருந்த கலெக்டர் முதல் பொதுமக்கள் வரை அத்தனை பேரும் கடும் அதிருப்தியுடன் சென்றனர். சிவகங்கை அருகே பாசாங்கரையை சேர்ந்தவர் இருளப்பசாமி (71). இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். இவர் 10 நாட்களுக்கு முன்பு, ‘செப். 13 (நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் காலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப்போகிறேன்’ என பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். இத்தகவலறிந்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாசாங்கரையில் குவிந்தனர். தினமும் குவிந்த மக்களுக்கு இருளப்பசாமி அருளாசி வழங்கினார். மேலும் அவரிடம் அருளாசி வாங்க சிவகங்கை மாவட்ட உயரதிகாரிகள் பலரும் குவிந்தனர்.

ஜீவசமாதி அடையப்போவதாக அவர் அறிவித்திருந்த நாளான செப். 13 (நேற்றுமுன்தினம்) அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜீவசமாதிக்காக 10 அடி நீளம், 10 அடி அகலத்தில் முன்னதாகவே பெரிய குழி தோண்டப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. அதே இடத்திலேயே சாமியானா பந்தல் அமைத்து தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி அளித்து வந்தார். மாலை முதல் நிமிடத்திற்கு நிமிடம் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். இரவு 11.30 மணியளவில் இருளப்பசாமியை சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் சந்தித்து ஆசி பெற்றதோடு அங்கேயே அமர்ந்திருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் இருளப்பசாமியை ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அரசு மருத்துவர் குழு பரிசோதனை செய்தது. பக்தர்கள் சிலர் பரவசத்தில் சிவ கோஷங்களையும், தேவார பாடல்களையும் பாடினர். இடையிடையே இருளப்பசாமி பக்தர்களுக்கு எழுந்து அருளாசி வழங்கினார்.

 நேரம் அதிகரிக்க, அதிகரிக்க டென்ஷன் எகிறியது. அவ்வப்போது இருளப்பசாமி எழுந்து நின்று, ‘‘என் ஜீவன் அடங்கும் நேரம் வந்துவிட்டது. சரியாக அந்த நேரம் வந்ததும், நான் தியானத்தில் ஈடுபடுவேன். பெண்கள் விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்கு ஜோதியில் ஐக்கியமாகி விடுவேன்...’’ என்றெல்லாம் கூறி பரபரப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார். எனினும் மருத்துவப் பரிசோதனையில் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் அவருக்கு சீராகவே இருந்தது. ஜீவசமாதிக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரமான நேற்று அதிகாலை 5 மணியை கடந்தும் இருளப்பசாமி, தெம்பாக அமர்ந்திருந்தார். இதனால் அங்கு குவிந்திருந்த பக்தர்களிடையே பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சிலர் இருளப்பசாமியிடம் கேட்டபோது, ‘‘ஜீவசமாதிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நேரம் முடிந்துவிட்டது.

வேறொரு நாளில் அடங்குவேன்...’’ என்று ‘கூலாக’ கூறினார். இதனால், பக்திப்பரவசத்துடன் அங்கு கூடியிருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர்.  பத்து நாளாக பரபரப்பை ஏற்படுத்திய இருளப்பசாமியின் ‘ஜீவசமாதி நாடகம்’ ஒரு வழியாக அதிகாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து கூட்டத்தை கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தினர்.  தொடர்ந்து கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில் இருளப்பசாமியை போலீசார் அவரது வீட்டிற்கு கூட்டிச் சென்றனர்.

Tags : Sivagangai Irulapasamy , End of life, Jivasamadhi, Sivagangai Irulapasamy
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில்...