×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.  கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் மழை குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், 37 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 28 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.  இருந்த போதிலும், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்கும், மாவட்ட நிர்வாகம் நேற்றும் தடை விதித்தது.  அதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், விநாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

தொடர்ந்து மாலை 4 மணி நிலவரப்படி, 21 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று காலை 120.49 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், மாலை 4 மணி நிலவரப்படி 120.26 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 93.88 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைந்தாலும், நீர்மட்டம் 120 அடியாக இருப்பதால், டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்கு வரும் ஜனவரி 28ம் தேதி வரை தடையின்றி தண்ணீர் திறக்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags : Mettur Dam , Mettur Dam, water tank
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு