×

படகு விபத்தில் பயணிகளை காப்பாற்றிய இளைஞர்களை அரசு கவுரவப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: படகு விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, மற்றவர்களின் உயிரை காப்பாற்றிய இளைஞர்களை அரசு கவுரவப்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 42 பேர் கொள்ளிடம் ஆற்றில் படகில் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கினர். இதில் 39 பேர் மீட்கப்பட்டனர். ஆற்றில் மூழ்கியவர்களில் 3 பேர் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்.

ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கியவர்களை அப்பகுதி இளைஞர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தானாக முன்வந்து தேடியதையும், காப்பாற்றியதையும் பாராட்டுகிறேன். அந்த இளைஞர்களை தமிழக அரசு கவுரவப்படுத்த வேண்டும். அதுதான் மற்றவர்களுக்கும் ஊக்கமாக அமையும். தனியாராக இருந்தாலும் அரசாக இருந்தாலும் ஆற்றில் படகை செலுத்த நினைத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை அரசு கண்காணிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Government ,passengers ,boat accident ,GK Vasan , Boat Accident, Youth, Government
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்