×

சட்ட விரோத பேனரால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் பேனரால் பொதுமக்கள் பாதிப்பு

காஞ்சிபுரம்: சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த பிறகும் கூட இன்னமும் அதிமுகவினர் பேனர் வைப்பதை நிறுத்தவில்லை. காஞ்சியில் முன்னாள் எம்பி பன்னீர்செல்வத்தின் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள் காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தினை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படுகின்ற பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் கோவையில் அமைச்சர் வேலுமணிக்காக வைக்கப்பட்ட பேனர் தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அதிமுகவினர் பேனர் தற்போது வரை அகற்றப்படவில்லை.

காஞ்சிபுரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்தின் இல்ல திருமண விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகைக்காக பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறியும் கூட தற்போது வரை காஞ்சிபுரத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் அகற்றப்படாமல் உள்ளது. இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் நேற்றைய தினத்தில் வைக்கப்பட்ட பேனர்களை உடனே அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் உத்தரவை அடுத்தும் கூட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இந்த பிரம்மாண்ட பேனர்களால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Subhashree ,death ,Kanchipuram , ADMK, Banner, Subasree, Kanchipuram
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்