×

அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது, நீதிமன்ற காவலில் திகார் சிலையில் உள்ளார். ஆனால் அமலாக்கத்துறைக்கு தொடர்பான வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மறுத்த நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கானது சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 20ம் தேதி அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்தது. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், தற்போது அவரது சிறைவாசத்தை நீட்டிக்க விரும்புகிறது. சிதம்பரத்தின் சிறைவாசத்தை நீட்டித்து, அவருக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துவது தவறான நோக்கமாகும். எனவே, அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரம் தற்போது காவலில் இருப்பதால் அவரால் ஆதாரங்களை அழிக்க முடியாது. எனவே, சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தேவைப்படும்போது சிதம்பரத்தை கைது செய்து விசாரிப்போம் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது, என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் வரும் 19ம் தேதி வரை, ப.சிதம்பரம் திகார் சிறையில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : Chidambaram ,CBI , Enforcement Department, PC Chidambaram, Delhi, CBI Special Court, INX Media
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்