×

வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகள் அதிகளவு உலா வருகிறது. அதை, சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.  பொள்ளாச்சி ஆடுத்த ஆழியார், நவமலை, சர்க்கார்பதி வனப்பகுதியில் குரங்கு, வரையாடு, யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதில் ஆழியாரில் இருந்து வால்பாறை ரோடு செல்லும் வழியில் வரையாடுகள் அதிகளவில் கண்ணில் தென்படுகிறது. வனத்தில் இருந்து வெளியேறும் வரையாடுகள் சாலையோரம் மேய்ந்து செல்கிறது.

 அதிலும், வால்பாறை மலைப்பாதை ரோட்டில் 5 முதல் 9வது கொண்டை ஊசி வளைவுகளில் கடந்து செல்லும் வரையாடுகளை, அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர். இருப்பினும், ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருக்கும் வரையாடுகளை, சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி புகைப்படம் எடுக்கின்றனர்.  இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘ஆழியார்-வால்பாறை ரோட்டில் ஆங்காங்கே உலாவரும் வரையாடுகளை, சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பது, தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், அந்த வழியாக வாகனங்களில் செல்வோர், வேகத்தை குறைக்க வேண்டும். வாகனங்களை விட்டு இறங்கி, உணவு வழங்கக்கூடாது. அவ்வாறு விலங்குகளை தொந்தரவு செய்தால்  நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : Forest Department Warns Travelers , Valparai ,Forest Department ,Varaiyadu, goats, pollachi
× RELATED சேலத்தில் போலீசாரின் நெருக்கடிக்கு...