×

கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் : திறந்தவெளி கழிப்பிடமாக மாறும் வைகை ஆறு

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆறு கழிவுநீர் கால்வாய் மற்றும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருவதால் சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கிறது. குடிநீர் தன்மையை இழுந்து வரும் கொடுமையை நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆறு, குளம், ஏரி, கால்வாய், கண்மாய் உள்ளிட்ட பகுதிகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து ஆறுகளின் தண்ணீரும் நேரடியாக கடலில் கலக்கும். ஆனால் வைகை ஆறு மட்டும் கடலில் கலக்காது என்ற தனிச்சிறப்பு உண்டு. வைகை ஆற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கண்மாய்களுக்கு மட்டுமே செல்லும்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தாகத்தை தீர்த்து கொண்டிருக்கும் வைகை ஆற்றின் இன்றை நிலை பரிதாபமாக உள்ளது.வைகை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பலர் புனிதமான வைகை ஆற்றை திறந்தவெளி கழிப்பிடமாகவும், தமிழக அரசின் நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் கழிவுநீர் கால்வாய்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர். பரமக்குடியில் உள்ள 36 வார்டுகளின் கழிவுநீர் மணிநகர். காட்டு பரமக்குடி, ஓட்டபாலம், ஆற்றுப்பாலம், முத்தாலம்மன்கோயில் படித்துரை, பெருமாள்கோவில், காக்காதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வைகை ஆற்றுக்குள் கழிவுநீர் விடப்படுகிறது.

பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் குடிநீர் ஆதாரமாக இருப்பது வைகை ஆறு மட்டுமே. தற்போது அந்த ஆற்றின் கரையோரங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதும், மதுபாட்டில்கள் மற்றும் கழிவுகளை கொட்டுவதும் தொடர்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் தனி நபர் செய்யும் தவறுகளால், குடிநீரின் தன்மை மாறி, அசுத்தமான தண்ணீராக மாறி வருகிறது. இதனால் காலரா, மலேரியா உள்பட பல்வோறு நோய்கள் பரவுகின்றன. மேலும் ஆடு, மாடு, கோழி உள்பட இறைச்சி கழிவுகள், பழைய டயர்கள், துணிகள், பிளாஸ்டிக், கட்டிடக்கழிவு, போர்வெல் கழிவுகள் என பலவிதமான கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், பரமக்குடி வைகை ஆறு மினி கூவமாக மாறிவருகிறது.

வைகை ஆற்றை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால், பொதுசுகாதராம் காக்கப்படாமல் உள்ளது என்பதற்காக, பொதுமக்களின் வசதிக்காக பரமக்குடியில், நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பலகோடி ரூபாய் செலவில் இலவச சுகாதார வளாகங்கள் கட்டி திறக்கப்பட்டும், முறையான பராமரிப்பும் இல்லாமல் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் சுகாதார வளாகங்களை பயன்படுத்த முடியாத பொதுமக்கள் வைகை ஆற்றை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

 மேலும். கழிவுநீர் ஆறாக ஓடுவதால் நிலத்தடி நீர் குடிநீர் தன்மையை இழுந்து வருகிறது. சில ஆண்டுகளில் வைகை ஆற்றில் தண்ணீர் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வைகை ஆற்றை பராமரிக்க கழிவுநீர் மற்றும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுத்தால் மட்டுமே வைகை ஆற்றை காக்க முடியும். நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வைகை ஆற்றறை கூவம் போன்று கழிவுநீர் கால்வாயாக மாறுவதற்கு முன் வைகையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Vaigai River ,administration , Muncipality , vaigai,Paramakudi, Open toilet
× RELATED டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை...