×

ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள கிராமத்தின் மீது பீரங்கி குண்டுகள் வீசி பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் எல்லைப்புறத்தில் உள்ள குரேஸ் கிராமத்தின் மீது பாகிஸ்தான் படைகள் பீரங்கி குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. பாகிஸ்தான் படைகள் பீரங்கி குண்டுவீசி தாக்கியதில் குரேஸ் கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஒரு மாதமாக ஜம்மு காஷ்மீரில் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு பாகிஸ்தான் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இருப்பினும், காஷ்மீரில் மிக பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தானை சேர்ந்த 40 தீவிரவாதிகள் எல்லைத் தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாகவும்  உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ஒருவரை இந்திய பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது.

நேற்று முன்தினம், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தீவிரவாதி ஆசிப் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, நேற்று ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் ஜம்மு எல்லை கத்துவாவில் நுழைந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த லாரியில் வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று பல அச்சுறுத்தல் சம்பவங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் பாகிஸ்தான் படை ஜம்மு காஷ்மீரின் எல்லை கிராமமான குரேசில் பீரங்கி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

பாகிஸ்தான் உளவாளி கைது:


ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பரபரப்பான சூழல் காணப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பார்மர் அருகே பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்மர் அருகே கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி விசாரணைக்காக ஜெய்ப்பூர் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : troops ,Pakistani ,village ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, border, Pakistan, artillery shells, Pakistan, attack
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...