×

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விநாயகர் சிலை கரைப்பின் போது விபரீதம்..: ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு!

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே விநாயகர் சிலை கரைப்பின் போது எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலின் கட்லாபுரா பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர் சிலையை கரைக்க சுமார் 16 பேர் படகில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் நீச்சல் வீரர்கள் அங்கு மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அகில் படேல், 11 பேர் உடல்களை இதுவரை மீட்டுள்ளோம்.

5 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் நீரில் மூழ்கிவிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். அதனால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்தில் 40 போலீசார், நீச்சல் வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் நிதியம் குழு ஆகியோர் உள்ளனர், என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பிசி.சர்மா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், ஒரே படகில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதால் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Tags : Madhya Pradesh ,Bhopal Statue ,Boeing , Madhya Pradesh, Bhopal, Ganesha statue, boat, accident, casualties
× RELATED சென்னை மாதவரம் பால்பண்ணை ஆவின் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி