×

பேனரால் இளம் பெண் பலி; பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல்; அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் இளம் பெண் சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவிலம்பாக்கத்தில் உள்ள சண்முகா கிராபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர்ஸ் அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் வேலை முடித்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார். குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கி.மீ.க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. ரேடியல் சாலையில் ஸ்கூட்டரில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீர் என அவர் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து கீழே சாலையில் விழுந்தார்.

அப்போது கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி கீழே விழுந்து கிடந்த சுபஸ்ரீ மற்றும் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.  லாரியின் முன்பக்கத்தில் சிக்கிய சுபஸ்ரீயின் உடல் மற்றும் தலையின் மீது ஏறிய பிறகுதான் லாரி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும் மற்றும் பரங்கிமலை போக்குவரத்து காவல் பிரிவினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : AIADMK ,councilor , Chennai, Pallikaranai, Banner, Subasree, AIADMK Banner, Teenage Mortality, Printable Seal
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...