×

தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை; கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம்; பொன்.மாணிக்கவேல் பேட்டி

சென்னை: 37 ஆண்டுகளுக்கு முன் மாயமான நடராஜர் சிலையை 2 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் மீட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் திருக்கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பாக 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த  ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை திருடப்பட்டது. திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்தில் டெல்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது. இது குறித்து சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பேட்டியளித்தார். 37 ஆண்டுகளுக்கு முன் மாயமான நடராஜர் சிலையை 2 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் மீட்டுள்ளதாக தெரிவித்தார். சிலையுடன் சேர்த்து பழங்கால தூண்களும் மாயமானதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாயமான மேலும் 20 சிலைகளை மீட்பது தொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் கிடைக்கவில்லை என்றும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூரில் உள்ளிட்ட நாடுகளில் சிலைகள் சிக்கியுள்ளதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை என்றும், தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில் தான் பிரச்னை உள்ளது என்று அவர் தெரிவித்தார். சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு தனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன என்று தெரிவித்த அவர், கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம் என்று அவர் தெரிவித்தார்.


Tags : government ,Courts ,Tamil Nadu ,Manikawel , Australia, Paddy, Kalidaikurichi, Natarajar Statue, Chennai. Pon.Manikkavel
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...