×

புழல் காவாங்கரை பகுதியில் நடந்த பெண் குழந்தை கொலையில் தாய் கைது

புழல்: புழல் பகுதியில் பெண் குழந்தை கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக தாயும் கைது செய்யப்பட்டார்.சென்னை வியாசர்பாடி சர்மா நகர் அடுத்த கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (24). இவர், பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கொடுங்கையூரில் ஒரு வீட்டிற்கு பந்தல் போடும்போது பவானி (20)  என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாழினி (3), ராஜேஷ் (1) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
ரமேஷ் காசநோயால் பாதிக்கப்பட்டு குடிபோதைக்கு அடிமையானதால் பவானி ரமேசை விட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளோடு கொடுங்கையூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் கொடுங்கையூரில் வசித்து வரும் பெயின்டர் முகமது ஆசிப் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், முகமது ஆசிப்பை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து குழந்தைகளோடு புழல் அடுத்த மாத்தூர் சிஎம்டிஏ  பகுதியில் பவானி வசித்து வந்துள்ளார்.

பின்னர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகர் 14வது தெருவில் வசித்து வந்த நிலையில் கடந்த 8ம் தேதி பகல் குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது என செங்குன்றத்தில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு பவானி மற்றும் முகமது ஆசிப் ஆகிய இருவரும் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை யாழினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை இறந்த தகவல் முதல் கணவர்  ரமேஷுக்கு தெரிய வந்தது. இதையடுத்து ரமேஷ் போலீசில் குழந்தையை அடித்து கொன்றுவிட்டார்கள் என புகார் செய்தார்.புழல் இன்ஸ்பெக்டர் தங்கதுரை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை மூச்சு திணறி சாகவில்லை என்பதும், குழந்தையை அடித்ததில்  மார்பு, தலை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து முகமது ஆசிப் மற்றும் பவானியை போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில், யாழினியை முகமது ஆசிப் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

எனவே முகமது ஆசிப் மீது போக்சோ, கொலை வழக்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை நேற்று முன்தினம் புழல் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் கொலையை மறைத்ததாகவும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் நேற்று குழந்தையின் தாயார் பவானியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர்.

Tags : murder ,girl child , Held, bustling ,Kavangarai , child murder
× RELATED விஷம் குடித்த தாய் சாவு