×

ஒன்றரை வயதில் மாயமான குழந்தை 20 ஆண்டுகளுக்கு பின் பெற்றோருடன் சந்திப்பு

சென்னை: புளியந்தோப்பு 3வது தெருவை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் (47). இவருக்கு சிவகாமி என்ற மனைவி, சரளா என்ற மகள், லோகேஷ் மற்றும் சுபாஷ் என 2 மகன்கள் இருந்தனர். கடந்த 1999 பிப்ரவரி 18ம் தேதி இரவு 7 மணியளவில்  இவர்கள் வீட்டு பகுதியில் மின்சாரம் தடைபட்டிருந்தது. அப்போது வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நாகேஷ்வரராவின் 3வது குழந்தையான ஒன்றரை வயது மகன் சுபாஷ் திடீரென மாயமானான். அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.   அதன்பிறகு  2006ம் ஆண்டு மோகன வடிவேலன் என்ற வழக்கறிஞர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அப்போதும் காவல் துறையால் கண்டுபிடிக்க முடியாத சூழலில்  3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு சி.பி.ஐக்கு  மாற்றப்பட்டது.விசாரணையில், திருவேற்காட்டில் இயங்கி வந்த ஒரு காப்பகத்தில் அச்சிறுவன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதும், பிறகு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு தம்பதியர் அச்சிறுவனை தத்தெடுத்து சென்றதும் தெரியவந்தது.    அதன்பின்பு அமெரிக்காவில் உள்ள சுபாஷின்  வளர்ப்பு பெற்றோர்களை சி.பி.ஐ அதிகாரிகள் இன்டர்போல் துறையின் உதவியுடன் தொடர்பு கொண்டு சுபாஷை இந்தியாவில் தேடி வருவதாக தெரியபடுத்தினர்.

அப்போது அந்த சிறுவனுக்கு 16 வயது  நடந்து கொண்டிருந்ததால் அந்த சிறுவனும் ஒரு தெளிவான முடிவை எடுக்கவில்லை.  அதன்பிறகு அந்த சிறுவனின் இமெயில் ஐ.டி யைப் பெற்றுக்கொண்டு நாகேஷ்வரராவின் வழக்கறிஞர் தொடர்ந்து  இமெயில் மூலம் சிறுவனின் பெற்றோர் மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களை அனுப்பி வந்துள்ளார்.தற்போது 22 வயது ஆகும் சுபாஷ்,  அவினாஷ் என்ற பெயரில் இந்தியாவிற்கு வந்து தனது பெற்றோர்களை பார்க்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சுபாஷின் ரத்த மாதிரி அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு,  புளியந்தோப்பில் உள்ள உண்மையான தந்தை நாகேஷ்வரராவின் ரத்தத்தை வைத்து டி.என்.ஏ பரிசோதனை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது.

இதில் நாகேஷ்வரராவின் காணாமல் போன மகன் சுபாஷ் என்ற அவினாஷ் என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்தியா வந்த சுபாஷ் மகாபலிபுரம் பகுதியில் தங்கி இருந்த நிலையில் நேற்று வழக்கறிஞர்  மோகன வடிவேல் உதவியுடன் புளியந்தோப்பில் உள்ள பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகளை பார்த்து மகிழ்ந்தார்.20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் வந்த செய்தி அப்பகுதியில் பரவியதால் அனைவரும் வந்து ஆச்சரியத்துடன் சுபாசை பார்த்து சென்றனர்.
இதுபற்றி அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், ‘‘நாங்கள் பேசுவது எதுவும் எனது மகனுக்கு புரியவில்லை என்றாலும் இத்தனை ஆண்டுகள் கழித்து அவனை பார்த்தது சந்தோசமாக உள்ளது. மீண்டும் அவன் ஓரிரு தினத்தில் அமெரிக்கா  செல்ல உள்ளான். அவன் அமெரிக்க சூழலில் வளர்ந்தவன் என்பதால் அங்கே இருப்பதுதான் சரி’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.



Tags : half ,parents , magical child, Meeting ,parents ,20 years
× RELATED மண் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கணுமா? வேளாண் துறையினர் விளக்கம்