×

டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி குடிமகன்களுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் நூதன போராட்டம்: ஆவடி அடுத்த அண்ணனூரில் பரபரப்பு

ஆவடி: ஆவடி அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு, தினமும் அதிகளவில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு, அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக நடந்து செல்லும் பெண்களிடம் தகராறு,  சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடிமகன்கள் அரைகுறை ஆடைகளுடன் அப்பகுதியில் நடனமாடி செல்கின்றனர். இதனால், பெண்கள் வெட்கப்பட்டு தலைகுனிந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. மேலும் மது அருந்திவிட்டு, காலி பாட்டிலை சாலையில் வீசி எறிந்து  செல்கின்றனர். இதனால், சாலையில் ஆங்காங்கே உடைந்த பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. இந்த சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களை இவை பதம் பார்ப்பதால் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இந்த 3 டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள்  பலமுறை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்கள் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி நீதி மன்றங்களையும் நாடியுள்ளனர். இருந்தபோதிலும் கடைகள் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் அதனை மூடுவதற்கும், டாஸ்மாக்  அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் செல்லும் பொதுமக்கள் தினமும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் கலைச்செல்வி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு  திரண்டு  வந்தனர். பின்னர் அவர்கள் கடைகளுக்கு மது அருந்த வந்த குடிமகன்களை ஆரத்தி எடுத்து வரவேற்று  நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. தகவலறிந்து ஆவடி உதவி கமிஷனர் ஜான்சுந்தர்,  திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடமிருந்து ஆரத்தி தட்டை பறிமுதல் செய்தனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போராட்டம் நடத்திய கலைச்செல்வி, வழக்கறிஞர் கவிதா திருமுகம், சவுந்தர்யா, சாந்தி, மாயா, துர்காதேவி, முருகேசன், மூர்த்தி உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags : women ,civilians ,task force , Urging ,Tasmac , close, Women struggle , civic life
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது