மருத்துவ சிகிச்சைக்கு சென்னை வந்த வங்கதேச இன்ஸ்பெக்டருக்கு அடி,உதை: போதை ஆசாமிகளுக்கு வலை

சென்னை: மருத்துவ சிகிச்சைக்கு சென்னை வந்த வங்கதேச இன்ஸ்பெக்டரை பைக்கில் வந்த போதை ஆசாமிகள் 3 பேர் சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவம்  நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.வங்கதேச நாட்டின் காவல் துறையில் இன்ஸ்பெக்டராக அரிபுல் இஸ்லாம் (38) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், தனது சகோதரரின் காது சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 9ம் தேதி வந்தனர்.  தொடர் சிகிச்சை காரணமாக அங்குள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கி உள்ளனர். இந்நிலையில், ேநற்று முன்தினம் இரவு அரிபுல் இஸ்லாம், தனது சகோதரர் குலாம் அப்பாஸ் அலிகானுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டு ஓட்டலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் போதை வாலிபர்கள் 3 பேர்  சாலையோரமாக சென்ற அரிபுல் இஸ்லாமை இடிப்பது போல் சென்றுள்ளனர்.

இதை அவர் கண்டித்ததால், போதை ஆசாமிகளுக்கும், அரிபுல் இஸ்லாமுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போதை ஆசாமிகள் இன்ஸ்பெக்டர் அரிபுல் இஸ்லாமை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் வலி தாங்க முடியாமல்  அவர் உதவி கேட்டு கத்தினார். அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் திரண்டனர். இதை பார்த்த போதை ஆசாமிகள் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். இதில், இன்ஸ்பெக்டர் அரிபுல் இஸ்லாமுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதுகுறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, தப்பி ஓடிய போதை ஆசாமிகளை தேடி  வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>