×

நீண்ட நேரம் ‘கிக்’ நீடிக்க மதுவில் கலந்து குடிக்க மாத்திரை விற்ற மெடிக்கல் ஷாப் உரிமையாளர் கைது: மொத்தமாக வாங்கி கொடுத்தவரும் பிடிபட்டார்

சென்னை: மதுவில் கலந்து குடித்தால் நீண்ட நேரம் போதை தரும் தூக்க மாத்திரையை, போதை ஆசாமிகளுககு விற்பனை செய்த மெடிக்கல் ஷாப் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அதிக  அளவில் தூக்க மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் வாலிபர்கள் மற்றும் குடிமகன்கள் ஏராளமானோர் மதுவில் தூக்க மாத்திரையை கலந்து குடிப்பதாக, எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மேற்கண்ட பகுதியில்  ரகசியமாக போதை ஆசாமிகளை கண்காணித்தனர். அப்போது, எம்ஜிஆர் நகர் டாஸ்மாக் பார்களில் போதை ஆசாமிகள் பலர் குவாட்டர் மது பானத்தில் மாத்திரையை போட்டு குடிப்பது தெரியவந்தது. அவ்வாறு, மதுவில் மாத்திரை கலந்து குடித்து போதையில் இருந்த எம்ஜிஆர் நகரை சேர்ந்த  மணிகண்டன் என்பவரை கடந்த செவ்வாய் கிழமை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது. குவாட்டர் மது பானத்தில் தூக்க மாத்திரை ஒன்றை கலந்து குடித்தால் வெகு நேரம் வரை போதை நீடிப்பதாகவும், இதனால் எங்களுக்கு ஒரு நளைக்கு, ஒரு குவாட்டர் பாட்டில் போதுமானதாக உள்ளது. மாத்திரை இல்லை என்றால் கூடுதலாக  மதுபானம் வாங்கி அருந்தும் நிலை உள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு ₹200 கூடுதல் செலவு ஆகிறத. இதை தவிர்க்க, மதுவில் தூக்க மாத்திரை கலந்து அருந்துவதாக தெரிவித்துள்ளார். உடனே தூக்க மாத்திரைகள் யார் மூலம் கிடைக்கிறது  என்று தொடர் விசாரணை நடத்தினர்.

அப்போது, எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (42) என்பவர் மூலம் மாத்திரை கிடைப்பது தெரியவந்தது. இவர், தி.நகரில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருவதும், இவரிடம் வாலிபர்கள் பலர் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இந்த தூக்க  மாத்திரைகளை அதிகளவில் வாங்கி செல்வதும் தெரியவந்தது. பாலாஜி (30) என்பவர் மூலம் ரவிச்சந்திரன் தூக்க மாத்திரைகளை அதிகளவில் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள வாலிபர்கள் மற்றும் போதை ஆசாமிகளுக்கு ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் தூக்க மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த மெடிக்கல் ஷாப் உரிமையாளர் ரவிச்சந்திரன் மற்றும் தூக்க மாத்திரையை மொத்தமாக வாங்கி விற்பனை ெசய்த வெப்டிசைர் பாலாஜி,  இவர்களுக்கு உதவிய கூலி தொழிலாளி மணிகண்டனை (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அதிகளவில் தூக்க மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் எம்ஜிஆர் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக இந்த வகை மாத்திரைகள் பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் வலி தெரியாமல் இருக்க மருத்துவர்களின் பரிந்துரைப்படி வழங்கப்படுகிறது. இதனை மொத்தமாக வாங்கி, போதை ஆசாமிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்

Tags : shop owner , Prolong , kickoff,drink wine,caught
× RELATED மகளுக்காக சேமித்த ரூ5 லட்சத்தில்...