×

நிலவில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள நாசா முயற்சி: ‘ஹலோ’ மெசேஜ் அனுப்பப்பட்டது

புதுடெல்லி: நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் நாசாவும் களம் இறங்கியுள்ளது. நிலவின் தென் பகுதியை ஆராய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. நிலவில் கடந்த 7ம் தேதி தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர், கடைசி நேரத்தில் அதன் தகவல் தொடர்பு துண்டானது. அது நிலவின் தரைப்  பகுதியில் சாய்ந்த நிலையில் கிடப்பது கண்டறியப்பட்டது. அதை தொடர்பு கொள்ளும் கடைசிக் கட்ட முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வரும் 20 அல்லது 21ம் தேதி வரைதான் நிலவின் தென்துருவ பகுதியில்  சூரிய வெளிச்சம் இருக்கும். அதற்குப்பின் விக்ரம் லேண்டரின் சோலார் பேனல்கள் மின் உற்பத்தி செய்யும் வாய்ப்புகள் இல்லை. அதற்குள் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி அவற்றை இயக்க வேண்டும்.

இந்நிலையில், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் களம் இறங்கியுள்ளது. நாசாவின் விண்வெளி தொடர்பு  தரைகட்டுப்பாட்டு(டிஎஸ்என்) மையங்கள் அமெரிக்காவின்  கலிபோர்னியா, ஸ்பெயினின் மேட்ரிட், ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா ஆகிய 3 நகரங்களில் உள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் 4 சக்தி வாய்ந்த ஆன்டனாக்கள் உள்ளன. 26 மீட்டர் உயரம், 70 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ஆன்டனாக்களில்  இருந்து விண்வெளியில் இருக்கும் பல செயற்கைகோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு ரேடியோ அலைகள் மூலம் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியும். இந்த முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ‘இமேஜ்’ என்ற நாசாவின்  உளவு செயற்கை கோளுடன் கடந்த 2005ம் ஆண்டு மாயமானது. அதை கண்டுபிடித்து மீண்டும் தகவல் தொடர்பு ஏற்படுத்தி பிரபலம் அடைந்த  விஞ்ஞானி ஸ்காட் டில்லி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் டிவிட்டரில் விடுத்துள்ள  செய்தியில், ‘‘கலிபோர்னியாவில் உள்ள டிஎஸ்என் 24-லிருந்து 12 கிலோவாட் திறனுடயை ரேடியே அலைகள் நிலவுக்கு கடந்த 2 நாட்களாக அனுப்பப்படுகின்றன. இவைதான் ‘ஹலோ’ தகவல்கள். இது விக்ரம் லேண்டரை தூண்டும் என  நம்புகிறோம். நிலவுக்கு அனுப்பப்படும் ரேடியோ அலைகள், 8 லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்து, அதன் சிறுபகுதி எதிரொலித்து மீண்டும் பூமிக்கு திரும்பும்போது அந்த சிக்னல் கண்டறியப்படும். இதர டிஎஸ்என் மையங்களும் இதேபோல்  சிக்னல்களை அனுப்பியிருக்கும் என நம்புகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

சந்திரயான்-2 மீது நாசாவுக்கு ஆர்வம் ஏன்?
சந்திரயான்-2 விண்கலத்தின் மீது நாசா அதிக அக்கறை செலுத்துகிறது. நாசாவின் ‘லேசர் பிரதிபலிப்பான்’ விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இது லேண்டரின் இருப்பிடத்தை கண்டறியவும், தூரத்தை கணக்கிடவும் பொருத்தப்பட்டது.  இந்த தகவல்கள் நாசாவின் எதிர்கால நிலவு ஆராய்ச்சி திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 2024-ம் ஆண்டு நிலவின் தென்துருவ பகுதிக்கு மனிதனை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. சந்திரயான்-2 ஆர்பிட்டரில் 8 அதிநவீன கருவிகள்,  கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவின் தென்துருவ பகுதியில் இது எடுத்து அனுப்பும் 3டி புகைப்படங்களை பெறுவதற்காக நாசா மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.



Tags : NASA ,Vikram Lander , Vikram Lander, NASA , Hello
× RELATED வானிலை நிலவரங்களை துல்லியமாக...