×

சூரிய குடும்பத்துக்கு வெளியேயுள்ள புதிய கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு: பூமியை போல் தட்பவெப்பம் நிலவுகிறது

லண்டன்: சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கே2-18பி என்ற கிரகத்தில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்துக்கு வெளியே, பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற கிரகம் விண்மீன் ஒன்றை சுற்றிக் கொண்டிருக்கிறது. இது பூமியை விட 8 மடங்கு பெரியது. இந்த கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு  மையம் மற்றும் நாசா மையத்தின் ‘ஹப்பிள்’ விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து வந்தது.  இதன் மூலம், கடந்த 2016ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை தொகுக்கப்பட்ட தகவல்கள், விண்மீனில் இருந்து கே2-18பி கிரகத்தில்  ஊடுருவும் வெளிச்சம் ஆகியவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்்த கிரகத்தில் நீராவி மூலக்கூறுகள், ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் நைட்ரஜன், மீத்தேன் மூலக்கூறுகளும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இங்குள்ள மேகக் கூட்டம்,  நீரின் அளவை கண்டறிய மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இது குறித்து லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஏஞ்சலாஸ் டிசாரஸ் என்பவர் கூறுகையில், ‘‘பூமியை தவிர, உயிர் வாழக்கூடிய  வகையில் உள்ள இன்னொரு கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சர்யமாக உள்ளது. கே2-18பி இன்னொரு பூமி அல்ல. அது வித்தியாசமான சுற்றுச்சூழலுடன் உள்ளது,’’ என்றார்.



Tags : planet ,Earth , solar system, Water, Discovery
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?