×

தீவிரவாதத்தை மீண்டும் கையில் எடுத்ததால் தலிபான்கள் மீது வலிமையான தாக்குதல்: டிரம்ப் விளக்கம்

வாஷிங்டன்: ‘‘தலிபான்களுடன் அமைதி பேச்சு முடிந்து விட்டது. அவர்கள் தீவிரவாதத்தை மீண்டும் கையில் எடுத்ததால், அவர்கள் மீது முன்பைவிட வலிமையாக தாக்குதல் நடத்தப்படுகிறது,’’ என டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி  நியூயார்க் இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனுக்கு  புகலிடம் கொடுத்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அக்டோபரில் தாக்குதல் நடத்தின. அந்தப்போர் இன்னும் முடியாமல் உள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட காலமாக நடக்கும் போராக ஆப்கன்  போர் மாறியது. இதை முடிவுக்கு கொண்டு வந்து, அமெரிக்க ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெற,  அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். இதற்காக தலிபான் தலைவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த  சனிக்கிழமை தலிபான் தலைவர்கள், ஆப்கன் அரசு பிரதிநிதிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவும் அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். ஆப்கானிஸ்தானில் தற்போது அமெரிக்க வீரர்கள் 14 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 5,400 பேரை 20  வாரங்களில் வாபஸ் பெற டிரம்ப் திட்டமிட்டு இருந்தார்.  

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவரும், 12 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர். இது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், தலிபான்களுடன் நடத்த இருந்த  ரகசிய பேச்சுவார்த்தையை கடைசி நேரத்தில் ரத்து செய்தார். மேலும், தலிபான்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தும்படி அமெரிக்க ராணுவத்துக்கும்  உத்தரவிட்டார். இது குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என நினைத்து, தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள்  செய்தது மிகவும் கொடூரமான செயல். இந்த தாக்குதலில் அமெரிக்க வீரரும், 12 அப்பாவிகளும் பலியாகியுள்ளனர். எங்கள் வீரரோடு, நேட்டோ படை வீரர் ஒருவரும் பலியாகியுள்ளார். அதனால் அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு,  அவர்களை வெளியேற்றுங்கள் என கூறிவிட்டேன். அவர்களுடன் எதுவும் பேச விரும்பவில்லை. தலிபான்கள் உடனான அமைதி பேச்சு முடிந்து விட்டது. தலிபான்கள் மீது முன்பைவிட வலிமையான தாக்குதல் தற்போது நடத்தப்படுகிறது,’’  என்றார்.

மிகப்பெரிய தவறுகள் செய்தார் போல்டன்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜான் போல்டனை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் நீக்கினார். இதற்கான காரணத்தை தனது பேட்டியில் டிரம்ப் விவரித்தார். அவர் கூறுகையில், ‘‘லிபியாவை போல்  வடகொரியாவையும் மாற்ற வேண்டும் என போல்டன் கூறினார். அது சரியான கருத்து அல்ல. லிபியா அதிபராக இருந்த கடாபிக்கு என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். வெனிசுலா விவகாரத்திலும், அவரது நடவடிக்கை திருப்தி  அளிக்கவில்லை. தேவையில்லாமல் என்னைவிட கடுமையான நடவடிக்கை எடுக்க போல்டன் விரும்பினார். எனது நிர்வாகத்தினருடன் அவர் ஒத்துப் போகவில்லை. அவர் மிகப் பெரிய தவறுகள் செய்ததால், அவரை நீக்கினேன். நாங்கள்  நாட்டை சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறோம். அதனால், உலகம் முழுவதும் நாங்கள் மீண்டும் மதிக்கப்படுகிறோம்,’’ என்றார். 


Tags : Taliban ,Trump , terrorism,Taliban, attack, Trump
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை