×

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி மாற்றப்பட்டது ஏன்?: உச்ச நீதிமன்றம் விளக்கம்

புதுடெல்லி: ‘உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள், நீதிபதிகளை இடமாற்றம் செய்வதற்கான பரிந்துரைகள், தகுந்த காரணங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. தேவைப்பட்டால், இந்த காரணங்களை தெரிவிக்க கொலிஜியம்  தயங்காது,’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதை மறுபரிசீலனை செய்யும்படி, கொலிஜியத்துக்கு நீதிபதி தஹில் ரமானி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மிகப் பெரிய சென்னை உயர்  நீதிமன்றத்தில் இருந்து, மிகச் சிறிய மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இவர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். பணியிட மாற்றம் உத்தரவை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் சென்னை வக்கீல்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.   நீதிபதி தஹில் ரமானி, மகாராஷ்டிராவில் உள்ள லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இதனால், இவரது பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் வக்கீல்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளனர். தஹில் ரமானி இடமாற்றம் சர்ச்சையானதால், உச்ச நீதிமன்றம்  நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ‘உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய, தகுந்த காரணங்களின் அடிப்படையிலேயே பரிந்துரை செய்யப்படுகிறது. நீதிமன்றத்தின் நலன் கருதி, பணியிட மாற்றத்துக்கான காரணங்கள்  வெளியிடப்படுவது இல்லை. தேவைப்பட்டால், அந்த காரணங்களை வெளியிட கொலிஜியம் தயங்காது,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Tahil Ramani ,Madras High Court ,Supreme Court , Chief Justice , Madras Icourt,Tahil Ramani
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு