நாட்டின் பொருளாதார பிரச்னையை தீர்க்க நிலையான திட்டங்களே தேவை வீண் வாதங்கள் தேவையில்லை: ராகுல் காந்தி காட்டம்

புதுடெல்லி: `நாட்டின் பொருளாதார பிரச்னையை தீர்க்க, நிலையான திட்டங்கள்தான் தேவையே தவிர, முட்டாள்தனமான வாதங்கள் அல்ல’ என ராகுல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவுவதால், மோட்டார் வாகனத் துறை படுவீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 10ம் தேதி சென்னையில் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் `மோட்டார் வாகனத்  துறையின் வீழ்ச்சிக்கு, பொதுமக்கள் ஓலா மற்றும் உபேர் போன்ற தனியார் வாகனங்களில் பயணிக்க விரும்புவதே காரணம். அவர்கள் சொந்த கார்களை வாங்கி தவணை என்ற வலைக்குள் சிக்க விரும்பவில்லை’ என கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியை இணைத்துள்ளார். மேலும், மன்மோகன் தனது பேட்டியில்   குறிப்பிட்டிருந்த ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது, விவசாயத்தை ஊக்கப்படுத்துவது, கிராமப்புற நுகர்வை அதிகரிப்பது போன்ற கருத்துகளை சுட்டிக்காட்டி இருக்கிறார். தனது டிவிட்டர் பதிவில் ராகுல், ‘நாட்டின் பொருளாதார பிரச்னையை தீர்க்க நிலையான பொருளாதார திட்டங்கள் தேவை. மாறாக முட்டாள்தனமான வாதங்கள், பிரசாரங்கள் மற்றும் மோசடியான செய்திகளை பரப்புவது அல்ல. முதலில் நாம்  பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளோம் என்பதை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். இதுவே, நல்ல தொடக்கத்திற்கான அறிகுறி,’ என்று கூறியுள்ளார்.

Tags : Rahul Gandhi ,country , economic problem, country,static projects, Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க...