×

திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நாளை தொடக்கம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்  நாளை தொடங்குகிறது என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : தமிழகத்தில் கடந்த 25 ம் தேதியன்று நடந்த இளைஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும். நம் தலைவர் அறிவுறுத்தலின் பேரிலும் திமுக இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளோம்.செப்டம்பர் 14 தொடங்கி, நவம்பர் 14 வரையிலான இரண்டு மாத காலத்தில் தமிழகம் - புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம்களை நடத்தி உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் தங்களை நம் இளைஞர் அணியில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

தங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டு உறுப்பினர்களாக இணையலாம். வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்காதவர்கள் மட்டும் ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு உறுப்பினராகச் சேரலாம். இளைஞர் அணியில் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்வது அவசியம். அவர்களும் தங்களின் உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்கும்போது மேற்சொன்ன அடையாள சான்றுகளை அளிப்பது அவசியம். இந்த உறுப்பினர் சேர்ப்பு முகாமை உங்களின் பிரதிநிதியாக இருந்து சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வளாகத்தில் 14ம் தேதி  காலை 9.30 மணிக்குத் துவக்கி வைக்கிறேன். அதைத்தொடர்ந்து சைதாப்பேட்டையிலும் உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடங்கி வைக்கிறேன்.

மேலும், இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகம், ராயபுரத்தில் உள்ள அறிவகம், முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லம், நம் கழகத்தின் தலைமையகமான அறிவாலயம், ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைவர் அவர்களின் இல்லம் ஆகிய இடங்களில் நடைபெறும் முகாம்களை பார்வையிடுகிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் முகாம் தொடங்கும் அதேநேரம் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் நம் மாவட்டக் கழக செயலாளர்கள், இளைஞர் அணியின் துணைச் செயலாளர்கள், நம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் தலைமையில் முகாம் தொடங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : DMK Youth Team ,Announcement ,Udayanidhi Stalin , DMK Youth Team Member, Udayanidhi Stalin
× RELATED 24 நாட்களில் 8,465 கி.மீ. பயணம் உதயநிதி...