×

பாஜ.வின் பொருளாதார கொள்கையை எதிர்த்து அக். 15 முதல் 25ம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘பொருளாதார மந்தநிலைக்கு காரணமான பாஜ அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 15ம் தேதி முதல் 10 நாட்களுக்கு காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்,’’ என சோனியா காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய, மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதற்கு, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ‘‘நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார சூழல் கவலை அளிக்கிறது. இழப்புகள் பெருகி வருகிறது. மக்களின் பொதுவான நம்பிக்கை அசைக்கப்படுகிறது. பொருளாதார இழப்புகள் பெருகி வரும் நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையை மத்திய அரசு விருப்பத்தோடு மேற்கொண்டு வருகிறது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் மற்றும் அம்பேத்கர் போன்ற சுதந்திர போராட்ட தலைவர்களின் பெயரை பாஜ அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. மோடி அரசின் கீழ் ஜனநாயகம் மிகவும் ஆபத்தில் சிக்கியுள்ளது. அரசு தனது அதிகாரத்தை ஆபத்தான முறையில் பயன்படுத்தி வருகிறது,” என்றார்.

மேலும் இந்த கூட்டத்தில், காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதை வெற்றிகரமாக செயல்படுத்த ஒவ்வொரு மாநில அணிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  நாடு முழுவதும் மாவட்டங்கள் தோறும் “ஊக்குவிப்பாளர்கள்” என்ற அணியை உருவாக்கி பயிற்சி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.்என்.சிங் அளித்த பேட்டியில், “நாட்டின் பொருளாதார சரிவை சுட்டிக்காட்டும் வகையில், நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் கூட்டங்கள் செப்டம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும். இதனை தொடர்ந்து பொருளாதார சரிவிற்கு வழி வகுக்கும் பாஜ அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக அக்டோபர் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி அக்டோபர் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை கட்சி சார்பில் பாதயாத்திரை நடத்தப்படும். காங்கிரஸ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை அக்டோபரில் தொடங்கும்,” என்றார். இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேச முதல்வர்  கமல்நாத், சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

Tags : BJP Nationwide Struggle ,Congress , BJP, economic policy, nationwide struggle, Congress
× RELATED ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை...