×

கடைமடைக்கு காவிரிநீர் வர நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்குநன்றி தெரிவித்து போஸ்டர்: தஞ்சை மாவட்டத்தில் பரபரப்பு

பேராவூரணி: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஒன்றியங்களில் பெருமகளூர் பெரிய ஏரி, பட்டங்காடு பெரிய ஏரி, தூராங்குடி மைனர் ஏரி, தென்பாதி ஏரி, செம்மங்குடி ஏரி, சோலைக்காடு ஏரி, ருத்ரசிந்தாமணி ஏரி, குளக்குடி ஏரி, கொரட்டூர் ஏரி, விளங்குளம் ஏரி என நூற்றுக்கணக்கான ஏரிகள் தூர் வாரப்படாததாலும், வரத்துவாய்க்கால்கள் அடைபட்டு கிடப்பதாலும், ஏரிகளில் நெய்வேலி காட்டாமணக்கு, சீமை கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது. இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கல்லணையில் இருந்து 17ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கடைமடை பகுதிகளில் சில இடங்களுக்கு தண்ணீர் குறைவாகவும், ஒரு சில இடங்களுக்கு ஓரளவும் சென்றன.

இருப்பினும் கடந்த சில நாட்களாக உபரிநீர் அதிகளவில் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. ஆனால் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில்  கடைமடை பகுதிகளுக்கு காவிரிநீர் கானல் நீர் தானோ, ஏரிகளில் எருக்கஞ்செடி காடுகள், வரத்து வாய்க்கால்கள் புதர் மண்டி கிடக்கும் அவலம், கடைமடை விவசாயிகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை, மாவட்ட ஆட்சியர், மந்திரிகள், எம்பி, எம்எல்ஏ அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Tags : shop ,brewery , Kovil, officials, people's representative, poster, Tanjore district,
× RELATED குற்ற வழக்குகளை முறையாக விசாரிக்காத 304...