தேனி ஆவின் தலைவராக ஓ.பி.எஸ் தம்பி செயல்பட தடை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: தேனி ஆவின் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா செயல்பட ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், பழனி செட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான அம்மாவாசை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மற்றும் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களை உள்ளடக்கியதாக மதுரை ஆவின் இருந்தது. கடந்தாண்டு நடந்த தேர்தலில் மதுரை ஆவின் உறுப்பினர்களாக 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா இருந்தார். கடந்த ஆக.22ல் மதுரை ஆவினில் இருந்து, தேனி மாவட்ட ஆவின் தனியாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.

தேனி ஆவினுக்கு விதிப்படி முறையாக தேர்தல் நடத்தி தேர்வானவர்கள் மூலமே, தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்ய முடியும். திடீரென விதிகளை மீறி தேனி ஆவினுக்கு 17 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து, ஓ,ராஜா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களாக ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஓ.ராஜா உள்ளிட்டோரின் நியமனத்தை ரத்து செய்ய ேவண்டும். அவர்கள் பணியாற்றத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில், ‘‘17 உறுப்பினர்கள்,தலைவர் உள்ளிட்டோர், தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். பின்னர் முறைப்படி தேர்தல் நடத்தப்படும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா, தற்காலிக உறுப்பினர்கள் செயல்பட இடைக்காலத்தடை விதித்தனர். மேலும், ஆவினின் அன்றாட நடவடிக்கைகளை துணைப்பதிவாளர் மேற்கொள்ள வேண்டும். மனுவிற்கு பால்வளத்துறை பதிவாளர் மற்றும் இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர், தேனி ஆவின் துணை பதிவாளர், ஓ.ராஜா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்.17க்கு தள்ளி வைத்தனர்.


Tags : OBS Thambi ,Theni Aw ,Icourt Branch Action , Theni Aav President, OPS Thambi, Icort Branch
× RELATED ஒரு மாத பரோல் கேட்டு நளினி மீண்டும் மனு