×

பாசனத்துக்கு பயன்படாமல் கடலில் கலப்பதை தடுக்க முக்கொம்பு, கதவணையில் தொடங்கி 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை தேவை: புதிய வாய்க்கால் வெட்டி ஏரியிலும் தண்ணீர் சேமிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருச்சி: ‘‘பாசனத்துக்கு பயன்படாமல் கடலில் கலப்பதை தடுக்க முக்கொம்பு, கதவணையில் இருந்து ஒவ்வொரு 10 கி.மீ.க்கும் ஒரு தடுப்பணை கட்டவேண்டும்; புதிய வாய்க்கால்களை வெட்டி ஏரியில் நிரப்ப ேவண்டும்’’ என்று அரசிடம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.   கர்நாடக  மாநிலம் குடகுவில் உற்பத்தியாகும் காவிரி ஆறு ஒகேனக்கல், பிலிகுண்டுலு வழியே  மேட்டூர் வந்தடைகிறது. அங்கிருந்து அகண்ட காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு சேலம்,  நாமக்கல், ஈரோடு, கரூர் வழியே திருச்சி மாவட்டத்தின் எல்லையான  பெட்டவாய்த்தலை வழியாக முக்கொம்பு பகுதியை வந்தடைகிறது. இந்த முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதியாக பிரிந்து செல்கிறது. இங்கிருந்து மேலணை, கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் பிரித்துவிடப்பட்டு டெல்டா பாசனத்துக்கு பயன்படுத்தப்படும்.

 டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த மாதம் 13ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.22 அடியாக இருந்தது.  இதனால், ஆரம்பத்தில் 10,000 கனஅடி திறந்துவிடப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 7ம் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை  எட்டியது. இதன்பின்னும், விநாடிக்கு  73 ஆயிரம் கனஅடி நீர் வந்ததால் அணையின் பாதுகாப்பு  கருதி, அப்படியே திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் முக்கொம்பு வந்ததும் அங்கிருந்து  கொள்ளிடத்தில் 20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனிடையே, மேட்டூரில் இருந்து அளவு குறைக்கப்பட்டு நேற்று முன்தினம் முக்கொம்புக்கு 60,000 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அது காவிரியில் 33,500  கனஅடி, கொள்ளிடத்தில் 36,500 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. இவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டும் ஒரு சில மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு சென்றடையவில்லை.

திருச்சி மாவட்டத்தில் 17 வாய்க்கால்கள் உள்ளது. 100க்கும் மேற்பட்ட ஏரி,  குளங்கள் உள்ளது. இதில் முக்கிய வாய்க்கால்களான முசிறி மேட்டு வாய்க்கால்,  பல்லவாய்க்கால், காட்டுவாய்க்கால், கொடுந்தரை வாய்க்கால் புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் ஆகியவற்றில் தண்ணீரே இதுவரை செல்லவில்லை.  கரூர் மாவட்டம் கல்லணையில்  இருந்து கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என 4 ஆறாக பிரிந்து  செல்கிறது. இதில் கல்லணையில் இருந்து காவிரியில் 9,548 கனஅடி, கொள்ளிடத்தில்  17,420 கனஅடியும், வெண்ணாறில் 9,022 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,004  கனஅடி நீரும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த கொள்ளிடம் ஆறு லால்குடி, புள்ளம்பாடி, அணைக்கரை சென்று  அங்கிருந்து வீராணம் ஏரிக்கு சென்று அங்கிருந்து நாகை-கடலூர் மாவட்டத்தை  இணைக்கும் சந்தப்படுகை கொள்ளிடம் ஆற்றை கடந்து 15,000 கனஅடி நீர் வீணாக  கடலில் கலந்து வருகிறது.

ஜூன் 12ம் தேதியான பாசன காலத்துக்கு 2 மாதம் முன்னதாகவே, ஏரி, குளங்கள்  தூர்வாரப்படாததாலும், வரத்து வாய்க்கால்கள்  தூர்ந்து போனதாலும் நீர் நிரம்பாமல் உள்ளது. அதே நேரத்தில் கடைமடையின்  பெரும்பகுதிக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் விவசாயிகள் சம்பா  சாகுபடியை தொடங்க முடியாமல் தவிக்கின்றனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீரானது சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் வழியே  திருச்சி மாவட்டம்  முக்கொம்பு பகுதியை வந்தடைகிறது. ஆனால் மேட்டூரில் இருந்து குஞ்சாண்டியூர் வழியே இடைப்பாடி, திருமலைசமுத்திரம், நாமக்கல், சேந்தமங்கலம் அடுத்த கொள்ளிமலை  அடிவாரத்தில் உள்ள அய்யாறு வரை வாய்க்கால் வெட்டி நீரை கொண்டு வருவதன்  மூலம் கடலில் கலந்து வீணாகும் நீரை சேமிக்க முடியும். அங்கிருந்து  திருச்சி, அரியலூர் மாவட்டம் வரையில் தண்ணீரை கொண்டு செல்லலாம்.

அதுபோல்  கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை அடுத்துள்ள புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்  வரை தண்ணீரை கொண்டு வந்து, அங்கிருந்து வையம்பட்டி, துவரங்குறிச்சி,  புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வரை புதிய  வாய்க்கால் வெட்டி விளாச்சிகுளம் ஏரியில் தண்ணீரை சேமிக்கலாம். இதன்மூலம் வீணாக தண்ணீரை கடலில் கலக்காமல் தடுக்க முடியும்.  முக்கொம்பு  மற்றும் கல்லணையில் திறந்து விடப்படும் காவிரி நீரை சேமிப்பதற்கு ஒவ்வொரு 10  கி.மீ. தொலைவுக்கும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக புதிய கால்வாய்க்கால் மற்றும்  தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த கருத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு  விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.

மேட்டூரில் இருந்து நீர்திறப்பு  33,000 கனஅடியாக குறைப்பு:
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் மழை குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 59 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு  37 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இதைதொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு விநாடிக்கு 33 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் இரவு 8 மணி நிலவரப்படி 120.59 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 94.441 டிஎம்சி. ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு நேற்று முன்தினம் மாலை 70 ஆயிரம் கனஅடியாக இருந்தது, நேற்று 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் 9வது நாளாக நேற்றும் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீேராட்டத்தின் திசையை மாற்றும்:
ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீரை செறிவூட்டவும், நீர் இருப்பை கூட்டவும் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. திருச்சி மாவட்ட குடிநீர் திட்டத்துக்கு நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. தடுப்பணைகளால் கரைப்பகுதிகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாது. தடுப்பணை நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கும், குடிநீர் திட்டங்களுக்கும் ஆண்டு முழுவதும் நீர் கிடைக்க செய்வதற்கு மட்டும்தான் பயன்படும். தடுப்பணைகள் நீரை சேமிப்பதற்கும் ஆற்று நீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து நிறுத்துவதற்கும், நீரோட்டத்தின் திசைைய மாற்றி தேவையான நிலப்பரப்புகளுக்கு நீரை கொண்டு செல்வதற்கும் கட்டப்படுகின்றன.

Tags : sea , The sea, the trunk, the door, the lake, the peasants
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!